ஆளுநரின் டெல்லி பயணம்... ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவா?

ஆளுநர்

தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோகித் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை வைத்திருப்பது தமிழக ஆட்சியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதிவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். ஆளுநர் மாளிகையிலே பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார். கோவைக்கு அரசுமுறை பயணமாகச் சென்றவர் அங்கு அரசு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதே போல், திருநெல்வேலியிலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவிக்க துவங்கினர். ஆனால், ஆளும்கட்சியான அ.தி.மு.க மட்டும் இந்த ஆளுநர் நடவடிக்கையைக் கண்டும் காணாமல் இருந்தது.

தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி ஆளுநரிடம் மத்திய அரசு கேட்டுவருகிறது. சமீபத்தில் ஒகி புயலால் கன்னியாக்குமரி மாவட்டமே கடுமையான பாதிப்புக்குள்ளானது. மீனவர்கள் பலர் கடலில் மாயமானார்கள். தமிழக அரசு மீனவர்களை தேடுவதில் அக்கறை காட்டவில்லை என்று மீனவ மக்கள் குமுறிவந்தநிலையில், குமரியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர் புரோகித். முதல்வர் கன்னியாகுமரி செல்லும் முன், ஆளுநர் அங்கு சென்றது முதல்வருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவ மக்களிடம் தேவையான உதவிகள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி மொழி கொடுத்துவந்தார் புரோகித். 

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன் டெல்லிக்குச் சென்றார் புரோகித். ஆளுநரின் இந்த டெல்லி பயணம் தமிழக ஆட்சியாளர்களை உன்னிப்பாகக் கவனிக்க வைத்தது. டெல்லியில் ஐந்து மாநில ஆளுநர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்றுவரும் ஆட்சி நிர்வாகம் குறித்து தீவர ஆலோசனை நடைபெற்றுள்ளது. அதன்பிறகு தமிழக ஆளுநர் புரோகித் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டவர்களையும் சந்தித்துள்ளார். மத்திய நிதி அமைச்சரிடம் ஒகி புயலால் பாதிக்கபட்ட கன்னியாகுமரிக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.

பன்ரிவால்- ராஜ்நாத் சிங்

அதே போல், தமிழகத்தில் நடைபெற்று ஆட்சி நிர்வாகம் குறித்து மத்திய உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் நீண்ட நேரம் விவாதித்தாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே மத்திய அரசு வழங்கும்நிதியை தமிழக அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்ற எண்ணம் மத்திய அரசிடம் இருந்து வருவதால்தான், ஆளுநரை வைத்து மத்திய அரசு ஆழம் பார்த்தது. ஆளுநரும் தமிழகத்தில் நிர்வாக நிலைகுறித்து உள்துறை அமைச்சரிடம் சில விவரங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் பற்றி ஆளுநர் அப்போது விவரித்துள்ளாதாகக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்தான் சேகர் ரெட்டியின் டைரி வெளியானது. அதில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் சிலரின் பெயரும் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில் உள்துறை அமைச்சருடன் ஆளுநர் நடத்திய சந்திப்பு அமைச்சர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஆளுநரிடம் மேலும் சில விவரங்களைக் கேட்டிருப்பதால், மாவட்ட வாரியாக ஆளுநர் சுற்றுப்பயணம் இனி தொடரும், ஆளும்தரப்பே அரண்டுபோகும் அளவில் இனி ஆளுநர் செயல்பாடு இருக்கபோகிறது என்கிறார்கள் கவர்னர் மாளிகை அதிகாரிகள். அதற்கான சிக்னல் மத்திய அரசிடம் இருந்து ஆளுநருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆளுநரை வைத்து தமிழக அரசை ஆட்டம் காண நினைக்கிறது மத்திய அரசு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!