15 கோடி ரூபாய் ஊழல்... பின்னணியில் பன்னீர்செல்வமும் சேகர் ரெட்டியும்!

கூட்டுறவு சங்க நில விற்பனையில் நடந்த ரூ.15 கோடி ஊழலின் பின்னணியில் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சேகர் ரெட்டியும் இருப்பதாக புகார் எழுப்பியிருக்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம். இதுபற்றி சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ வெளியிட்டிருக்கும் தகவல்.

சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

வேலூர் மாவட்டத்தில் இருக்கும் 'வட ஆற்காடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் தச்சு மற்றும் கருமார் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சார்பில்; தாரா படவேடு கிராமம் சர்வே எண்.664/2B மற்றும் 665/5-ல் உள்ள 87120 சதுர அடி நிலத்தினை 21.10.2014 அன்று நாளிதழில் விளம்பரப்படுத்தி 30/10/2014 அன்று ஏலம் விடப்பட்டது. 27.11.2014-ல் கே.வாசு என்பவருக்கு ரூ.9,27,82,800-க்கு கதர் வாரிய கூட்டுறவுச் சங்க விதிகளையும், வாரிய மற்றும் அரசின் அனுமதியும் பெறாது காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 27.11.2014 அன்று பதிவுசெய்து கொடுக்கப்பட்டது. அரசு மற்றும் கதர் வாரிய விதிமுறைகளை மீறி தனி நபருக்கு வழி காட்டுதல் விலைக்கும்(Guideline Value) குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இடத்தை வாங்கிய கே.வாசு சேகர் ரெட்டியின் பினாமி எனச் சொல்லப்படுகிறது. சேகர் ரெட்டிக்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் உள்ள “நல்லுறவு” குறித்து தமிழகம் அறியும். இந்த நிலவிற்பனை ஊழலின் பின்புலத்தில் சேகர் ரெட்டியும், பன்னீரும் உள்ளனர். இவர்கள் கூட்டுசேர்ந்து இந்த ஊழலை செய்துள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்.

தமிழ்நாடு  மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு உற்பத்தியாளர் கூட்டுறவு சம்மேளனம் தனது 2 ஏக்கர் நிலத்தினை உரிய தீர்மானங்களுடன் அரசு கைவினைப்பொருள்கள் கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறைக்கு மைய அரசின் மத்திய தொழில் பாதுகாப்பு துறைக்கு விற்பனை செய்ய, அனுமதி கோரி, பல வருடங்களாக அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலம் விற்பனை செய்யப்பட்டு கிடைக்கும். தொகையில் தங்களது பணிக்கொடை மற்றும் நிலுவை ஊதியங்களைப் பெறலாம் என சுமார் 100-க்கும் மேற்பட்ட பனை வெல்ல கூட்டுறவு சம்மேளனம் பணியாளர்கள் உள்ளனர். இதற்கு வருடக்கணக்கில் விடை கிடைக்காத நிலையில் வேலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் தச்சு மற்றும் கருமார் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை விற்பனைசெய்து அரசுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அவசர கதியில் குறைந்த விலைக்கு கே.வாசுக்கு 87120 சதுர அடி நிலம் விற்பனை செய்யப்பட்டதில் வாரியத் தலைமை அலுவலக அலுவலரும் வேலூர் உதவி இயக்குநர் அலுவலக அலுவலரும் ஊழல் செய்துள்ளனர். அரசிற்கு இழப்பு ஏற்படுத்தும் என்று தெரிந்தே அரசின் ஒப்புதல் பெறாமல் குறைந்த மதிப்பிற்கு நிலத்தினை விற்பனை செய்தது ஊர்ஜிதம் ஆகிறது. இந்த நிலம் ரூ.23,35,68720 விற்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது 23 கோடி மதிப்புள்ள நிலம் 9 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது அதிலும் ரூ.1 கோடி திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் துணையோடு, தனிநபர் ஒருவர் ஆதாயம் அடைவதற்காக அரசுக்கு 15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது ஆவணங்களின் அடிப்படையில் தெரியவருகிறது.

இது தொடர்பாக சட்டப் பஞ்சாயத்து இயக்கம் 20/07/2017 அன்று அரசு கைவினைப் பொருள்கள்  கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறையின் செயலாளருக்கு புகார் கொடுத்தது. துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சேகர்ரெட்டி இந்த ஊழலில் சம்பந்தபட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க துறைச் செயலாளர் முன்வரவில்லை. பிறகு உயர்நீதிமன்றத்தில் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறையும் துறைச் செயளாலரும் நடவடிக்கை எடுக்க முன்வந்து குறைந்த விலைக்கு விற்கக் காரணமான சேகர் ரெட்டியின் நண்பரும் துணை இயக்குநர் (கதர்) ரவியை 31/10/2017 அன்றும், விற்ற பிறகு 1 கோடியை நிலம் வாங்கிய கே வாசுவுக்கே திரும்பக் கொடுக்கக் காரணமான என்.நாகராஜனை 30/11/2017 அன்றும் ஓய்வு பெறும் தேதியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால் இந்த ஊழலுக்கு உடந்தையாக இருந்த, விற்பனை செய்ய அனுமதி வழங்கிய தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத் தலைமைச் செயல் அலுவலர் க.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மீதும் நிலம் வாங்கிய கே.வாசுவுக்கு ரூ1கோடி திரும்பக் கொடுக்க அனுமதி வழங்கிய தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தற்போதைய தலைமைச் செயல் அலுவர் சுடலைக் கண்ணன் ஐ.ஏ.எஸ் மீதும் நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். அதற்கு மூல காரணமான சேகர் ரெட்டி .பன்னீர்செல்வம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட நிலத்தை மீட்டு அரசிடம் சேர்க்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ரவி,.நாகராஜன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு சட்டப் பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!