`நான் தொடர்ந்து பேசுவேன்!' - எடப்பாடிக்கு சவால்விடும் ஆவடி குமார்

இன்று நடந்த அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கட்சிக்கு புதிய செய்தித் தொடர்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அதில், ஆவடி குமார் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்ததில் இருந்து கட்சியில் களையெடுக்கும் வேலைகளில் படுவேகமாக பார்த்து வருகிறது ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணை. தினகரன் ஆதரவாளர்களை களை எடுப்பது, இடைத்தேர்தலுக்கு வேலைகளை முடுக்கி விடுவது என்று திரை மறைவில் வேலைகள் வேகமெடுத்த நிலையில், இன்று ராயப்பேட்டையில் இருக்கும் அ.இ.அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில், இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அ.தி.மு.க-வுக்காக பிரத்யேகமாக நாளிதழ் மற்றும் டிவி சேனல் தொடங்கப்படும் என்பது முதல் அறிவிப்பு. இரண்டாவதாக, இனி யாரெல்லாம் கட்சி சார்பில் செய்தித் தொடர்பாளர்களாக இருப்பர் என்கிற பட்டியல்.

அதில், பொன்னையன், பா. வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், பேராசிரியர் தீரன், கே.சி.பழனிச்சாமி, ஏ.எஸ். மகேஸ்வரி மற்றும் பாபு முருகவேல் ஆகிய 12 பேர் மட்டுமே இனி நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி ஆகிய சமூகத் தொடர்பு ஊடகங்களில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது கட்சியின் தலைமை. இதுநாள்வரை அ.தி.மு.க சார்பில் பலர் ஊடக விவாதங்களில் கலந்து வந்தனர். அவர்கள் யாரும் இனி தன்னிச்சையாக கட்சியின் கருத்தை பொது வெளியில் கூற முடியாது. அ.தி.மு.க சார்பில் விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவடி குமார். ஆனால், அவர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆவடி குமார்

இது குறித்து அவரிடம் பேசினோம், `கட்சியின் நிர்வாகிகள் ஒன்றுகூடி செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளார்கள். அதனால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு முடிவு எடுக்கப் போவது குறித்து என்னிடம் யாரும் கலந்து பேசவோ ஆலோசிக்கவோ இல்லை. நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, ஜெயலலிதா என்னுடை எழுத்தைப் பார்த்து பாராட்டினார். பின்னர், என்னைத் தனிப்பட்ட முறையில் அழைத்து `கட்சி சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளுங்கள்' என்று சொன்னார். அவரின் உத்தரவின் பேரில்தான் இதுநாள்வரை நான் விவாதங்களில் பங்கேற்று வருகிறேன். இப்போது, கட்சியின் தலைமை ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அதில் என் பெயர் இல்லை. ஆனால், அது என்னைக் கட்டுப்படுத்தாது. நான் தொடர்ந்து ஊடக விவாதங்களில் கலந்துகொள்வேன். அவர்கள் வெளியிட்ட பட்டியலுக்காக, ஊடகத்திடமிருந்து என்னை நான் துண்டித்துக் கொள்ளமாட்டேன். ஏனென்றால், என்னை இந்தப் பணியைச் செய்யச் சொல்லியது ஜெயலலிதா. ஆகையால், நான் தொடர்ந்து பேசுவேன். அவர்களின் முடிவை விரைவில் திருத்திக் கொள்வார்கள்' என்றார் உறுதியாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!