Published:Updated:

2ஜி ஊழலை நியாயப்படுத்த பிரதமர் முயற்சி: மா.கம்யூ

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை நியாயப்படுத்த பிரதமர் மன்மோகன் சிங் முயற்சிப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தொலைக்காட்சி செய்தி ஆசிரியர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் 16 அன்று (புதன்)  அளித்த பேட்டியில் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி, வரலாறு காணாத அலைக்கற்றை ஊழலை மறைப்பதற்கு முயற்சித்ததோடு, அதை நியாயப்படுத்தவும் முற்பட்டிருக்கிறார்.

2-வது தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில், "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற முறை பற்றி தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா தம்மிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்று பேட்டியில் பிரதமர் கூறியிருக்கிறார்.

ஆனால், 2007-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியன்று பிரதமர் எழுதிய கடிதத்திற்கு ஆ.ராசா அன்றே எழுதிய பதிலின் நான்காவது பாராவில் "Now the Department has dedcied to continue with existing policy (First cum first served) for  processing of applications ..." ) என கூறியிருக்கிறார்.

மேலும் டிசம்பர் 26 அன்று பிரதமருக்கு ஆ.ராசா எழுதிய இன்னொரு கடிதத்தின் இணைப்பிலும் இதே அம்சத்தை கீழ்க்கண்டவாறு மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார். "அனைவருக்கும் சேவை தொடர்பான உரிமங்களை வழங்குவதில், விண்ணப்பதாரர்களுக்கு 'விருப்பக் கடிதம்' வழங்குவதற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையை தொலைதொடர்புத்துறை பின்பற்றுகிறது.

அதாவது, முதலில் பெறப்படும் விண்ணப்பம் முதலில் பரிசீலிக்கப்பட்டு, தகுதி பெற்றதானால், 'விருப்பக் கடிதம்' அதற்கு அளிக்கப்படும்." ("DOT follows a policy of First-cum First Served for granting LOI  to the applicants for UAS licence, which means, an application received first will be processed first and if found eligible will be granted LOI").

அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சர் பிரதமருக்கு எழுதிய இரண்டு கடிதங்களிலும் "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை" என்ற முறையை பின்பற்றுவதாக  எழுதியுள்ள போது, அப்பிரச்சனையே தனக்கு தெரியாது என  பிரதமர் சாதிப்பதற்கு என்ன பொருள்? முறைகேடு நடக்கவுள்ளது எனத் தெரிந்திருந்தும், தான் தலையிடாததை நியாயப்படுத்தவும், மூடி மறைக்கவுமே பிரதமர் முற்படுகிறார் என்பது தெளிவாகிறது.

"முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்ற முறையையே கூட ராசா பின்பற்றவில்லை என்பது வேறு விஷயம்.  இப்பிரச்னையை அமைச்சர்கள் குழு விவாதித்திட வேண்டுமென சட்டம் மற்றும் நீதித்துறை ஆலோசனை கூறியதாகவும், ஆனால் அதற்கு அவசியமில்லை என்றும் ஆ.ராசா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்   (02-11-2007) கூறுகிறார். இக்கடிதத்தை பரிசீலித்த பிரதமர் அமைச்சர்கள் குழு விவாதித்த பிறகு முடிவெடுக்கலாம் என்று ஏன் வலியுறுத்தவில்லை?

மேலும், 3-ஜி மற்றும் ஒய்மேக்ஸ் ஆகியவைகளை ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்வதற்கு அநேகமாக நாங்கள்  முடிவெடுத்து விட்டோமென 2-11-2007ல் ஆ.ராசா கூறுகிறார். இக்கடிதம் எழுதிய ஒரு மாதத்திற்கு பிறகுதான், 10-1-2008ல் 2வது அலைக்கற்றை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 3-வது அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பமும் கோரப்படவில்லை, யாரும் மனுவும் செய்யவில்லை. இருந்தபோதிலும், 3-வது அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுத்து விட்ட அமைச்சர் ஏன் 2-வது அலைக்கற்றையை ஏலத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யவில்லை என்ற கேள்வி ஏன் பிரதமருக்கு தோன்றவில்லை? காரணம் தெரிந்ததே.

வரலாறு காணாத முறைகேடு நடந்ததால் அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதை மூடி மறைக்கவே ஊழலை நியாயப்படுத்தும் வகையில் பிரதமர் வாதிடுவது வேடிக்கையானது, பரிதாபமானது.

ஆ.ராசா மீண்டும் அமைச்சராக்கப்பட்டது கூட்டணி விஷயம் என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்த விஷயத்தை பொறுத்தவரை என் கையில் அதிகாரம் இல்லை என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆ.ராசா அமைச்சராக்கப்பட்டதற்கு அரசியல் கூட்டணி மட்டும் காரணமல்ல. அவரைத்தான் அமைச்சராக்க வேண்டும் என்று பெரிய முதலாளிகள் வலியுறுத்தி வெற்றிபெற்றது நீரா ராடியா டேப் உரையாடல் மூலம் தெளிவாகியுள்ளது. அரசியலைத் தாண்டிய ஒரு கூட்டணி செயல்பட்டிருப்பதை பிரதமரால் வெளிப்படையாக கூறமுடியவில்லை என்றாலும் அதுதான் உண்மை.

இடதுசாரிக்கட்சிகள் ஆதரவோடு பிரதமராக இருந்தபோது கொத்தடிமை போல நடத்தப்பட்டதாக பிரதமர் ஆதங்கப்பட்டார். சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வற்புறுத்தியதற்காகவே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார். ஆனால் ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட ஊழல் பிரச்சனைகளில் யாருடைய நலனுக்காக இவர் செயல்பட்டுள்ளார் என்பது அவர் அளித்துள்ள பேட்டி மூலமாகவே தெளிவாகிறது," என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.