முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் போன்கால்! | Stalin stresses TN CM to take action on Bus strike over phone

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (06/01/2018)

கடைசி தொடர்பு:13:15 (06/01/2018)

முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் போன்கால்!

தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு, போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று முற்பகல் 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தைமூலம் முடிவுக்குக் கொண்டுவந்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்னையைப் போக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினார். ஸ்டாலின் சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர், தொழிலாளர் பிரச்னையையும் பொது மக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விவரம் எதையும் வெளியிடவில்லை.