`இன்னோவா காரும் போச்சு...' - நாஞ்சில் சம்பத்தை புலம்பவைத்த தலைமைக் கழக அறிவிப்பு | A threat issued to Najil Sampath by ADMK's administration

வெளியிடப்பட்ட நேரம்: 23:06 (16/01/2018)

கடைசி தொடர்பு:23:06 (16/01/2018)

`இன்னோவா காரும் போச்சு...' - நாஞ்சில் சம்பத்தை புலம்பவைத்த தலைமைக் கழக அறிவிப்பு

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அ.தி.மு.க-வின் துணை கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் நாஞ்சில் சம்பத். அவருக்கு அப்போது ஒரு இன்னோவா காரையும் பரிசாகக் கொடுத்தார் ஜெயலலிதா. இந்தக் காரைக் கேட்டு தற்போது தலைமைக் கழகத்திலிருந்து மிரட்டல் வந்துள்ள நிலையில், டென்ஷனாகியுள்ளார் சம்பத்.

நாஞ்சில் சம்பத்

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா கைதாகி பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். ஆறு மாதம் கழித்து அந்த வழக்கில் அவரை கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. உடனடியாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல மாதங்கள் போயஸ் கார்டன் உள்ளேயே முடங்கிக் கிடந்தார். ஜெயலலிதா சிறைக்குச் சென்றது முதல் வெளிவந்து சில மாதங்கள் கழிந்த பின்னரும் அரசு திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டன. அப்போது, `ஜெயலலிதா வந்து திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர்தான், செயல்பாட்டுக்கு வரும்' என்று அரசு வட்டாரம் வெளிப்படையாக சொல்லாமல் சொல்லியது. ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பங்கேற்ற சம்பத், `நூற்றுக்கும் மேற்பட்ட அரசுத் திட்டங்கள் தயாராக இருந்தபோதும் ஏன் அது அமல்படுத்தப்படவில்லை?' என்ற கேள்விக்கு `அம்மா வரட்டும்னு காத்திருந்தோம்' என்று பதில் கூறி அதிரவைத்தார். இணையத்தில் அவர் கூறிய பதில் படுவைரலாக, பேட்டி முழுவதுமாக முடிவதற்கு முன்னரே அவரது துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆனால், கட்சியின் அடிப்படை உறுப்பினராக அவர் தொடர்ந்து நீடித்து வந்தார். இந்த நிலைமை ஜெயலலிதா இறப்பு வரை தொடர்ந்தது. பின்னர், சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக பதவியேற்றபோது, கொள்கை பரப்புச் செயலாளர் பதவி திரும்ப அளிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் அணி, ஈ.பி.எஸ் அணி, தினகரன் அணி என கட்சி பல துண்டுகளாக உடைந்தபோதும், சசிகலாவுக்கு ஆதரவான தினகரன் அணியிலேயே அவர் இருந்து வருகிறார். 

தற்போது, தினகரன் புதுக் கட்சி தொடங்கப் போவதாக தகவல் வந்துகொண்டிருக்கும் நிலையில், அ.தி.மு.க தலைமை கழகத்திலிருந்து வந்த ஒரு செய்தி சம்பத்தை கடுகடுக்க வைத்துள்ளது. அதாவது, `உங்களுக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா காரை நாளை மதியத்திற்க்குள் தலைமை கழகத்தில் சரண்டர் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், போலீஸில் உங்கள் மீது புகார் கொடுக்கப்படும்' என்று அதிரடி காட்டியுள்ளது. இதையடுத்து சம்பத், `இது அம்மா எனக்கு கொடுத்த கார். இதை அவர்கள் யாரும் எனக்கு வழங்கவில்லை. ஆனால், என்னவோ அவர்கள் சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுத்தது போன்று திரும்பக் கேட்கின்றனர். இவ்வளவு ஈனத்தனமாக கட்சி மாறியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது' என்று தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருகிறார் நாஞ்சில் சம்பத்.