வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (17/01/2018)

கடைசி தொடர்பு:22:47 (17/01/2018)

`ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் ரெடி!' - ரஜினி பளீச்

நேரடி அரசியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குதித்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், `கமலுடன் கூட்டணி வைப்பீர்களா' என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, `காலம்தான் பதில் சொல்லும்' என்று பதிலளித்துள்ளார். 

ரஜினிகாந்த்

சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து அரசியல் களத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கமல்.

காரில் பறந்த ரஜினி


இந்நிலையில்தான் இன்று போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து காரில் வெளியே வந்த ரஜினியிடம் நிருபர்கள், `கமலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளாரே, அவருடன் கூட்டணி வைப்பீர்களா' என்று கேட்டனர். அதற்கு ரஜினி, `கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து காலம்தான் பதில் சொல்லும். தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ள கமலுக்கு எனது வாழ்த்துகள்' என்று சூசகமாகப் பதில் கூறியவரிடம், `ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் நீங்கள் தயாராக இருப்பீர்களா' என்று கேட்கப்பட்டது, `கண்டிப்பாகத் தேர்தலைச் சந்திப்பேன்' என்று கூறிவிட்டுப் பறந்தார்.