Published:Updated:

"சீப்பை ஒளித்துவைத்தால், கல்யாணம் நின்னுருமா என்ன?"- தம்பிதுரைக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!

"சீப்பை ஒளித்துவைத்தால், கல்யாணம் நின்னுருமா என்ன?"- தம்பிதுரைக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!
"சீப்பை ஒளித்துவைத்தால், கல்யாணம் நின்னுருமா என்ன?"- தம்பிதுரைக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!

கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில், வரும் 29-ம் தேதி டி.டி.வி.தினகரனை வைத்து எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட இருக்கிறார், செந்தில்பாலாஜி. ஆனால், காவல்துறை அந்தப் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்க, "சீப்பை எடுத்து ஒளித்துவைத்தால், கல்யாணம் நின்னுரும்கிற கதையால்ல இருக்கு. உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடி, அனுமதி வாங்கி இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவேன்" என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தரப்பைப் பார்த்து சவால்விடுகிறார் செந்தில்பாலாஜி. 

அ.தி.மு.க ஒன்றாக இருந்த ஜெயலலிதா காலத்திலேயே முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு கோஷ்டியாகவும், தம்பிதுரை மற்றும் இப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருவரும் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு, கரூர் அ.தி.மு.க-வை ரணகளப்படுத்திவந்தார்கள். செந்தில் பாலாஜியை கரூர் அ.தி.மு.க-வில் ஒழித்துக்கட்டத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவியும், மாவட்டச் செயலாளர் பதவியும் வாங்கிக்கொடுத்தார் தம்பிதுரை. அ.தி.மு.க இரு அணிகளாகப் பிரிந்த பிறகு, தம்பிதுரையும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் தங்க, செந்தில்பாலாஜி,  டி.டி.வி.தினகரன் அணிக்குத் தாவினார்.

இந்நிலையில்தான், வரும் 29- ம் தேதி, கரூர் மாவட்டத்தில் டி.டி.டி.தினகரனை வைத்துப் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை நடத்த இருக்கிறார். அதற்காக, கரூர் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்டு, கடிதம் கொடுத்திருந்தார் செந்தில் பாலாஜி. அதற்கு, காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதனால்தான், தனது ஆதரவாளர்களிடம் செந்தில்பாலாஜி, "சீப்பை எடுத்து ஒளித்துவைத்துவிட்டால், கல்யாணம் நின்னுருமா. காவல்துறையிடம் நமக்கு கூட்டம் நடத்த அனுமதி தர வேண்டாம்னு தம்பிதுரையே நேரடியாக போன்போட்டுச் சொல்லியிருக்கிறார். மதுரை ஹைகோர்ட்ல கேஸ் போட்டு, அதன் பிறகு அனுமதி வாங்கி இந்தக் கூட்டத்தை நடத்தியே தீருவோம். இந்தக் கூட்டத்தில், நாம் கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அ.தி.மு.க தொண்டர்களையும் திரட்டி, 'கரூர் மாவட்ட அ.தி.மு.க-வே டி.டி.வி.தினகரன் பக்கம்தான்' என்பதைக் காட்டிவிடுவோம் என்கிற பயத்தில் தம்பிதுரை இப்படி முட்டுக்கட்டைபோடுறார். ஆனால், என்ன தடை வந்தாலும் கூட்டத்தை நடத்தியே தீருவேன்" என்று சவால் விட்டாராம்.