வெளியிடப்பட்ட நேரம்: 09:57 (25/01/2018)

கடைசி தொடர்பு:11:00 (25/01/2018)

எம்.பி ஓய்வூதியம் பெறும் தினகரனுக்கு எதற்கு எம்.எல்.ஏ சம்பளம்?

தினகரன்

மிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை, தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்திருக்கிறார். 

தமிழக அரசு நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கும் நிலையில், எம்.எல்.ஏ-க்களின் சம்பளத்தை இந்த அரசு, உள்நோக்கத்துடன் உயர்த்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், தொகுதி மக்களின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகளின் துணையுடன் நிறைவேற்றப்போவதாகவும் சொல்லி, பரபரப்பைக் கூட்டியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தினகரனின் இதுபோன்ற அதிரடி அறிவிப்புகள் வியப்பானதாகவும், அதேநேரத்தில் மக்களைக் கவரும் வகையில் போலியான அறிவிப்பாகவும் பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் அரசியல் நிகழ்வுகளை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் அ.தி.மு.க. தரப்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட மதுசூதனனுக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு அப்போது 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இத்தொகுதியில் வெற்றிபெற்ற டி.டி.வி. தினகரன் சார்பில், வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் வழங்கி வாக்குப்பதிவுக்குப் பின்னர், அந்த டோக்கனைக் கொடுத்து 10 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்றும் உறுதியளிக்கப்பட்டதாகவும் அப்போதே புகார்கள் எழுந்தன. எனினும், டோக்கன் வழங்கியதாகக் கூறப்படும் புகாரை தினகரன் தரப்பினர் மறுத்துவந்தனர்.

இதனிடையே "தினகரன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டபடி, இடைத்தேர்தல் முடிந்ததும் 20 ரூபாய் டோக்கனுக்குப் பதிலாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை" என்று அந்தத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் பலரும் புகார் தெரிவித்த சம்பவங்களும் அரங்கேறின. இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, தினகரன் அளித்த உறுதிமொழியின் அடிப்படையில் தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க, அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது. 

ஆர்.கே.நகர் தொகுதியானது, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் கொண்ட பகுதிகள் நிறைந்தது. எனவே, வாக்காளர்களைக் கவரும் வகையில் தந்திரமாக ஹவாலா முறையில் பணம் வழங்கியதன் அடிப்படையிலேயே தினகரன் வெற்றிபெற்றார் என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிபெற்ற டி.டி.வி. தினகரன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். 

அப்போது அவர், "அதிகாரிகள் துணையுடன் தொகுதி மக்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகப் புகார் வந்துள்ளது. மேலும், முதியோர் உதவித்தொகை, விதவைகளுக்கான உதவித்தொகையைப் பெறுவதில் சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடுகிறது. அடிப்படை வசதிகளும் இத்தொகுதியில் குறைவாகவே உள்ளன. மக்களின் குறைகளை அதிகாரிகளின் நேரடி கவனத்துக்குக் கொண்டுசென்று, அவர்களின் உதவியுடன் நிறைவேற்றுவேன். 

தமிழக அரசின் நிதிநிலை மோசமாக உள்ள நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். எம்.எல்.ஏ-க்கள் வேறு எங்கும் இடம்பெயர்ந்து விடாமல் தடுக்கும் நோக்கத்தில் இந்த சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 'தினகரன் சிறைக்குச் சென்று விடுவார்' என்று ஒரு அமைச்சர் பேசுகிறார். முதல்வர் பழனிசாமி ஆத்திரத்தின் உச்சத்தில் என்னைக் கடுமையாக விமர்சிக்கிறார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய நேரத்தில் இதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

இதற்கிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்தின் செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். அவர்கள் சேகரிக்கும் விவரங்களை விரைவில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார்கள் என்று தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இ.மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு. நாகராஜன் மற்றும் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றுள்ள தினகரன் ஆகியோரின் செலவுக் கணக்குகளை மட்டுமே மத்தியப் பார்வையாளர் இன்னமும் இறுதி செய்யவில்லை என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு ஆதரவாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்புவேன் என்று கூறி வாக்குகளைப் பெற்ற தினகரன், தற்போது அதைப்பற்றி பேசத் தயங்குகிறார். இப்போது, தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்ததும், இந்த அரசு கவிழும் என்கிறார்.

தினகரனின் திடீர் விசிட் பற்றி ஆர்.கே. தொகுதிக்குட்பட்ட சிலரிடம் பேசினோம். தண்டையார் பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள், ``ஆர்.கே.நகர் தொகுதியிலேயே தங்கியிருந்து மக்களுக்குச் சேவையாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார் தினகரன். ஆனால், இதுவரை இரண்டு நாள்கள் மட்டுமே தொகுதிக்கு வந்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற பெயரில் புகைப்படத்துக்கும் பத்திரிகைகளுக்கும் போஸ் கொடுத்துச் சென்றார். வாக்கு எண்ணிக்கை வெளியாகி ஒருமாதமான நிலையிலும் தொகுதிக்கான எந்த திட்டங்களையாவது நிறைவேற்ற அவர் முயற்சி எடுத்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை" என்று கொதிக்கிறார்கள். மேலும், "எம்.எல்.ஏ-க்கள் சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தினகரன், ஏற்கெனவே மக்களவை உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அப்படியானால், எம்.பி. பதவிக்கான ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ளும் அவர், சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஊதியத்தை முழுவதுமாக நிராகரிக்கலாமே" என்கின்றனர் அவர்கள்.

``அதிகாரிகள் துணையுடன் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று கூறும் தினகரன், கடந்த சில தினங்களுக்கு முன், தொகுதிக்குட்பட்ட பகுதியில், குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாகக் கூறி, ஆதரவாளர்கள் சிலருடன் அந்தப் பகுதி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் ஏற்கெனவே அளித்த புகார் மனு என்னவானது? அந்த மனு மீதான நடவடிக்கை என்ன? என்பதை தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்களே தெளிவுபடுத்த வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதியைச் சேர்ந்த நடுநிலையாளர்கள்.

ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதால், சோர்வடைந்த, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், டிசம்பர் மாதத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்து, தங்களின் தொகுதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' என்ற ரீதியில் எம்.எல்.ஏ-வாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தங்களும் பிரச்னைகளுக்குத்தான் தீர்வில்லை என்று புலம்புகின்றனர் ஆர்.கே.நகர்வாசிகள்....!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்