மாநகரப் பேருந்தில் சென்ற விஜயகாந்த்; 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தார் | Vijayakanth travelled in bus to oppose bus fare hike

வெளியிடப்பட்ட நேரம்: 17:16 (29/01/2018)

கடைசி தொடர்பு:19:39 (29/01/2018)

மாநகரப் பேருந்தில் சென்ற விஜயகாந்த்; 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தார்

பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க ஆலந்தூரில் இருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தார் தே.மு.தி.க-வின் தலைவர் விஜயகாந்த். அப்போது. கண்டக்டரிடம் 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுத்தார்.

தமிழக அரசு சில நாள்களுக்கு முன்னர் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது. இதையடுத்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் வீதிக்கு வந்து போராடவே, நேற்று சொற்ப அளவில் விலை ஏற்றத்தைக் குறைத்தது அரசு. `பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கியே கட்டணக் குறைப்பு செய்யப்பட்டது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கூறினார். ஆனால், இதைப் பல்வேறு அரசியல் கட்சிகள், `வெறும் கண்துடைப்பு. திட்டமிட்டபடி அரசுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்' என்று கூறி இன்று பல இடங்களில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.

இதையொட்டி, பஸ் கட்டண உயர்வுக்கு தே.மு.தி.க சார்பில் இன்று பல்லாவரத்தில் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வருகை தந்தார். கட்டண உயர்வுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் விஜயகாந்த், ஆலந்தூரிலிருந்து பல்லாவரத்துக்குப் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, தனது சட்டை பையில் இருந்து 500 ரூபாய் எடுத்து, தொண்டர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தார் விஜயகாந்த்.