தள்ளிப்போகும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்- காரணம் என்ன?

சட்டமன்றம்

தமிழகத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது என்ற கேள்விக்கு முறையாக எந்தப் பதிலும் சட்டமன்ற செயலகத்தில் இருந்து வெளிவராத நிலையில் சட்டசபைக் கூட்டம் பிப்ரவரி மாத இறுதிக்குத் தள்ளிப்போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று, பிப்ரவரி 14-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. பழனிசாமியின் ஓராண்டு ஆட்சிக்காலத்தை விமர்சையாகக் கொண்டாட தமிழக அரசு முடிவெடுத்து, அந்தக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. இதையொட்டி, வரும் 15-ம் தேதி கலைவாணர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்த முறையான அறிவிப்பு அடுத்த ஓரிரு தினங்களில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. 

இந்நிலையில் மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ஓராண்டு ஆட்சிக்கால நிறைவுவிழாக்  கொண்டாட்டம் முடிந்ததும், பிப்ரவரி 16-ம் தேதி அன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று முதலில் செய்திகள் பரவின. ஆனால், பட்ஜெட்டுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் தமிழக அரசுத் துறைகளின் ஆய்வுக்கூட்டங்கள் இதுவரை நடத்தப்படவி்ல்லை. அதேபோல் பிப்ரவரி முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அதுகுறித்து எந்த அறிவிப்பும் அரசுத் தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்த நிலையில் சட்டசபைக் கூட்டத்தொடர் இப்போது கூட்டப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 

சட்டசபை

"முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்புரை அறுவைசிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வில் இருந்துவருகிறார். அதேபோல், பல துறைகளிலும் பட்ஜெட் குறித்து எந்த முன்னேற்பாடுகளும் இதுவரை நடைபெறவில்லை. துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றால்தான், ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது தெரியவரும். அதுபோன்ற ஆய்வுக்கூட்டங்கள், பத்து நாள்கள்வரை நடைபெற வாய்ப்புள்ளளது. இதனிடையே இந்தக் கூட்டத்தொடரில், சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு நிகழ்வை நடத்திவிட வேண்டும் என்று முதல்வர் எண்ணுகிறார். இதுகுறித்து டெல்லியில் பிரதமர் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அங்கிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. முதல்வரின் ஓராண்டு ஆட்சி நிறைவு கொண்டாடத்தைக்கூட நடத்துவதா, வேண்டாமா என்ற ஆலோசனையும் ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர் பழனிசாமி என்பதால், ஓராண்டுக் கொண்டாட்டம் நடத்தினால் தினகரன் தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழக்கூடும் என்று முதல்வர் தரப்பில் எண்ணுகிறார்கள். இதனால் பிப்ரவரி மத்தியில் கூட்டப்பட இருந்த சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் முதல்வாரம்தான் கூட்டப்படும் என்று தெரிகிறது" என்கிறார் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர். 

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் குறித்து சட்டப்பேரவைச் செயலக அதிகாரிகளிடம் பேசியபோது, "இதுவரை எங்களுக்கு சட்டசபை கூட்டத்தொடர் குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், இந்த முறை சட்டசபை நீண்டநாள் கூட்டத்தொடராகத்தான் அமையும். அரசுத்தரப்பில் அனைத்துத் துறைகளின் ஆய்வுகளும் முடிந்து எங்களுக்கு அறிவிக்கை வந்தவுடன் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த நாங்கள் தயாராகி விடுவோம். வேறு எதுவும் எங்களுக்குத் தெரியாது" என்கிறார்கள். 

கடந்த ஓர் ஆண்டாகவே அரசுத் துறை செயலாளர்களின் பணிகள், பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துவரும் நிலையில், அதன் எதிரொலி பட்ஜெட்டில் தெரிந்துவிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

தமிழகத்தில் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால், சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!