Published:Updated:

திமுக அணியில் 80 இடங்களில் போட்டியிட காங். விருப்பம்

சென்னை, பிப்.21,2011

திமுக அணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.##~~##

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க - காங்கிரஸ் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலுவும் தெரிவித்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் 80 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் மேலிடம் ஆட்சியில் பங்குபெற விரும்புவதாகவும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 60 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று தி.மு.க. தரப்பில் சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தரப்பில் பா.ம.க.வுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட அதே 31 தொகுதிகள் இப்போதும் அளிக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக, தங்களின் கட்சி மேலிடத்தில் தெரிவித்து, அவர்களின் கருத்தையும் அறிந்துவருவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு நிருபர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறுகையில், தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு குழுவும், காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினரும் சந்தித்து பேசினோம். இரண்டு கட்சிகளில் உள்ள நிலைப்பாடு குறித்து விரிவாக பேசினோம். பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக அமைந்தது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையாக பேச இருக்கிறோம்.

இன்னும் ஓரிரு நாளில் மீண்டும் பேசி முடிப்போம். அப்போது நல்ல செய்திகளை உங்களுக்கு சொல்வோம். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி, வெற்றிக்கூட்டணி. தி.மு.க.வும் காங்கிரசும் மிகவும் இணக்கமாக இருக்கும் கட்சிகள். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், முதல்வர் கருணாநிதியும் மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சியை நடத்தி வருகிறார்கள்.

முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவுகளை தி.மு.க. தலைமைக்கும், காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் தெரிவிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட பேச்சுவார்தை நடைபெறும். அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்படும்," என்றார் தங்கபாலு.

துணை முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், "பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் பேச்சுவார்த்தை குறித்து இரண்டு தலைவர்களுக்கும் எடுத்துக் கூறுவோம் என்றும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும்," என்றார்.