``பேரவையின் மாண்பைக் குலைக்க வேண்டாம்!’’ - ஜெயலலிதா படத்திறப்புக்கு ஸ்டாலின் கண்டனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படம் திறக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. 

இதனையடுத்து முதல்வர், துணை முதல்வர் தலைமையில் சபாநாயகர் தனபால் நாளை (12.2.2018) காலை ஜெயலலிதா படத்தை திறந்து வைப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்புக்கு தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஊழல் வழக்கில் முதல் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்தைச் சட்டப்பேரவையில் திறப்பது கண்டனத்துக்குரியது. குற்றவாளியின் புகைப்படத்தை திறந்து வைக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. இதன்மூலம் ஜனநாயக நெறிமுறைகளையும், மக்களாட்சி தத்துவத்தின் மாண்புகளையும் குழி தோண்டிப் புதைக்க சபாநாயகர் துணிந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுகிறது. 

அவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும், அதிகாரம் படைத்த பேரவைத்தலைவர், இன்றைக்கு அவைக்கு ஒவ்வாத ஊழல் குற்றவாளியின் படத்தை திறந்து வைக்கப் போகிறார் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு. குற்றவாளியின் புகைப்படத்தை திறந்து வைத்து ஏற்கனவே பேரவையில் திறந்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படங்களின் மாண்பைக் குறைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். நாளை இந்த நிகழ்ச்சி நடந்தால், அதில் தி.மு.க. பங்கேற்காது" என்றார். அதேபோல், ஜெயலலிதா உருவப்படம் திறப்புக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா உருவப்படத்தைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தி தி.மு.க. சார்பில் பேரவைச் செயலாளர் பூபதியிடம் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!