``தொழில்நுட்ப வளர்ச்சியை மனிதகுல முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த வேண்டும்!’’ - துபாயில் பிரதமர் மோடி பேச்சு

நான்கு நாள்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்படி, முதலாவதாக ஜோர்டன் மற்றும் பாலஸ்தீனம் சென்ற அவர் இரு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, பிரதமர் மோடிக்கு கிராண்ட் காலர் விருது வழங்கி பாலஸ்தீன அரசு கௌரவப்படுத்தியது. இதையடுத்து இன்று, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற மோடிக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத்தை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே ரயில்வே, மின்சாரம் குறித்த 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்பின்னர் துபாய் சென்ற பிரதமர் மோடி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ``இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்தது, இந்தியாவின் 125 கோடி மக்களுக்கு கிடைத்த பெருமையாகும். துபாயில் அதிகளவில் இந்தியர்கள் வாழ்கின்றனர். புலம்பெயர்ந்த சுமார் 30 லட்சம் இந்தியர்களுக்குத் தங்கள் நாட்டை போன்ற சூழ்நிலையை வளைகுடா நாடுகள் ஏற்படுத்தி தந்துள்ளன. இந்தியர்கள் சார்பில் இதற்காக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியர்களின் 2-வது தாய் வீடாக அரபு நாடுகள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக துபாய் விளங்குகிறது. உலக வங்கி வெளியிட்ட வர்த்தகம் செய்ய ஏதுவான நாடுகளின் பட்டியலில் இந்தியா 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதை மேலும் மேம்படுத்த விரும்புகிறேன். மேம்பட்ட வளர்ச்சியை அடையத் தேவையான எதையும் செய்ய அரசு தயாராக இருக்கிறது. துபாயிலும், தாய்நாட்டிலும் இந்தியர்கள் விரும்பிய கனவை நிறைவேற்ற இணைந்து பணியாற்றுவோம். தொழில்நுட்ப வளர்ச்சியை சிலர் அழிவு நோக்கில் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதை மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை அழிவுக்குப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் கடுமையானதாக இருக்கும்" என்றார். முன்னதாக அபுதாயில் அமையவிருக்கும் முதல் இந்துக்கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!