கடும் எதிர்ப்பையும் மீறி பேரவையில் இன்று ஜெயலலிதா படம் திறப்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம், இன்று தமிழக சட்டப்பேரவையில் திறக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பலத்த பாதுகாப்புடன் இந்தப் படத் திறப்புவிழா நடைபெறுகிறது. 

சட்டசபை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படம் திறக்கவும், மெரினாவில் அவருக்கு நினைவிடம் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றுவந்தன. இந்நிலையில் இன்று (12.2.2018), பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில், பேரவைத் தலைவர் திறந்துவைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு,  எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. சட்டப்பேரவையில் குற்றவாளியான ஜெயலலிதாவின் புகைப்படத்தைத் திறக்கக் கூடாது என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 'அவைக்கு ஒவ்வாத சொற்களை நீக்கும், அதிகாரம் படைத்த பேரவைத்தலைவர், இன்றைக்கு அவைக்கு ஒவ்வாத ஊழல் குற்றவாளியின் படத்தைத் திறந்துவைக்கப்போகிறார் என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழுக்கு’ என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம் வைத்தார். அதே போன்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

சட்டமனறம்

இந்நிலையில், பலத்த எதிர்ப்புகளையும் மீறி ஜெயலலிதா உருவப்படம் இன்று திறக்கப்படுகிறது. இதற்காக, தமிழக சட்டப்பேரவை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!