வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (12/02/2018)

கடைசி தொடர்பு:11:55 (12/02/2018)

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழக சட்டப்பேரவையில் அவருடைய உருவப்படம் திறக்க முடிவுசெய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 அதன்படி இன்று, ஜெயலலிதா உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்துவைத்தார். திறப்பு விழாவுக்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் தலைமைதாங்கினர். இதன்மூலம், பேரவையில் திறக்கப்படும் 11-வது தலைவர் புகைப்படம் இதுவாகும். விழாவில், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். இதேபோல, உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர், தி.மு.க-வினர் அமரும் இருக்கையில் அமரவைக்கப்பட்டனர். சரியாக 7 அடி உயரம், 5 அடி அகலத்தில் ஜெயலலிதா உருவப்படத்தை கவின் கலைக்கல்லூரி முன்னாள் முதல்வர் மதியழகன் வரைந்துள்ளார். இந்த உருவப்படம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அமரும் இருக்கைக்கு எதிரே, நிறுவப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக,  நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவரின் உருவப்படத்தை பேரவையில் திறக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல, உருவப்படத்தை திறக்கக்கூடாது என தி.மு.க சார்பில் பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் பேரவைக் கொறடாவுமான விஜயதாரணி, ஜெயலலிதா உருவப்பட திறப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், விஜயதாரணி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், பேரவையில் முதல்முறையாக ஒரு பெண் படம் திறப்பதை நான் வரவேற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் அவர், படத் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க