`தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசுப் பணி' செங்கோட்டையன் சர்ச்சைப் பேச்சு!

அ.தி.மு.க தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசுப் பணி கிடைக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா இருக்கும்போது மௌனமாக இருந்த அமைச்சர்கள் தற்போது தான்தோன்றித்தனமாகக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் அவ்வப்போது சர்ச்சைகள் உருவாகி வந்தன. இந்தநிலையில், அ.தி.மு.க தொண்டர்கள் கைகாட்டுபவர்களுக்கே அரசுப்பணி கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார். 

ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், "80 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க-வை அசைக்க முடியாது. சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றி காணப்படும். தொண்டர்கள் சோர்வோடு இருப்பது எதிர்காலத்தில் இருக்காது. பல்வேறு திட்டங்கள் உங்களை நோக்கி கொண்டு வர வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், அதற்குத் தொடர்ந்து இடர்ப்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. அதைத் தகர்த்தெறியும் சக்தி அ.தி.மு.க-வுக்கு இருக்கிறது. இனி கவலைப்படத் தேவையில்லை. எதிர்காலத்தில் தொண்டர்கள் கை காட்டுபவர்களுக்கே அரசுப்பணி கிடைக்கும்" என்றார். செங்கோட்டையனின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. முன்னதாக இதேபோன்று, அரசின் திட்டங்களுக்கு அ.தி.மு.க உறுப்பினர் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும் எனக் கூட்டுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!