வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (12/02/2018)

கடைசி தொடர்பு:16:52 (12/02/2018)

`ஜெயலலிதா உருவப்படத்தைத் திறந்ததில் எந்தத் தவறும் இல்லை' - பா.ஜ.க. எம்.பி இல.கணேசன் கருத்து!

ஜெயலலிதா, சட்டமன்றத்தில் மறக்கவும் மறுக்கவும் முடியாத வகையில் பங்காற்றியுள்ளார். அதனால் அவரின் உருவப்படத்தைத் திறந்ததில் எந்தத் தவறும் இல்லை என பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம், இன்று சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது. முதல்வர், துணை முதல்வர் தலைமையில், சபாநாயகர் தனபால் உருவப்படத்தைத் திறந்துவைத்தார். இதன்மூலம், பேரவையில் திறக்கப்படும் 11-வது தலைவர் புகைப்படம் இதுவாகும். இந்த நிலையில், ஜெயலலிதா படம் திறப்புக்கு அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பும், ஆதரவும் எழுந்துள்ளன. தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்க, பா.ஜ.க தலைவர்களோ ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, திருச்சி தேசியக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் பேசுகையில், `பிரதமரின் நாடாளுமன்றப் பேச்சை மக்கள் வரவேற்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் கேள்விக்குத்தான் பிரதமர் பதிலளித்துள்ளார். சிறு தொழில் தொடங்குபவர்கள் குறித்து இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் கவலைப்படவில்லை. நாங்கள் சிறு தொழில் செய்பவர்களுக்குப் பல்வேறு கடனுதவிகளை வெற்றிகரமாகச் செய்துள்ளோம். ஜெயலலிதா சட்டமன்றத்தில் மறக்க, மறுக்க முடியாத வகையில் பங்காற்றியுள்ளார். அதனால், அவர் உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்ததில் எந்தத் தவறும் இல்லை. அதை நான் வரவேற்கிறேன்' எனத் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க