Published:Updated:

``தேர்தல் எப்போது?'' - அமைச்சர்களின் விளக்கத்தால் விழி பிதுங்கிய தொண்டர்கள் 

``தேர்தல் எப்போது?'' - அமைச்சர்களின் விளக்கத்தால் விழி பிதுங்கிய தொண்டர்கள் 
``தேர்தல் எப்போது?'' - அமைச்சர்களின் விளக்கத்தால் விழி பிதுங்கிய தொண்டர்கள் 

உள்ளாட்சித் தேர்தல் எப்போது என்று அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் ஆளுக்கு ஒரு மாதத்தைக் குறிப்பிட்டுப் பேசியதால் அ.தி.மு.க. தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். 

 அ.தி.மு.க. சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் அம்பத்தூரில் நடந்தது. மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கூட்டத்தில் ராமசந்திரன் எம்.பி, அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்பட கட்சியினர் கலந்துகொண்டனர்.

 கூட்டத்தில் பேசிய அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், "நான் இன்னொரு அணியிலிருந்து வந்தாலும் ஒற்றுமையாக நாம் செயல்பட்டுவருகிறோம். ஜெயலலிதாவின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். எந்த நேரத்திலும் என்னை நீங்கள் சந்திக்கலாம். கட்சியைப் பலப்படுத்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரலாம். எனவே, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றிபெற வேண்டும். கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை அனைவரும் தீவிரப்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் புதியவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும்" என்றார்.

தன்னுடைய பேச்சை நிறைவு செய்துவிட்டு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூட்டத்திலிருந்து சென்றுவிட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் புறப்பட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே மைக்கைப் பிடித்த மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், யாரும் கலைந்து செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். 

இதையடுத்து, அமைச்சர் பெஞ்சமின் பேசுகையில், உறுப்பினர்கள் சேர்க்கையில் நிர்வாகிகள் கவனம் செலுத்தவேண்டும். அதாவது, கட்சிப் பதவிகளில் இருப்பவர்கள், உறுப்பினர்களை அதிகமாகச் சேர்க்கவேண்டும். அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், உள்ளாட்சித் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் அதிகளவில் உறுப்பினர்கள் கட்சியில் சேர்க்கப்பட வேண்டும் என்றார். 

இரண்டு அமைச்சர்களும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புத் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்தால் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க-வினர் குழப்பம் அடைந்தனர். 

 இதற்கிடையில், கூட்டத்தில் பேசிய மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர், 'கட்சிக்குத் துரோகம் செய்தவர்கள், இந்த ஆட்சியை கவிழ்க்க முயன்றுவருகிறார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது' என்றார் ஆவேசமாக. 

 கூட்டத்தில், ஜெயலலிதா பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும், புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்க்கவேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்குப் பிரியாணி வழங்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த எண்ணிக்கையில் கட்சியினர் வராததால் பிரியாணி மிஞ்சியது.