மின்வாரிய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்! - ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 கணக்கீட்டுக் காரணியாக 2.57 சதவிகிதம், பஞ்சப்படியாக 125 சதவிகிதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர்கள் நீண்ட நாள்களாகப் போராடி வருகின்றனர். 

இதற்காக மின்வாரியத் தொழிற்சங்கங்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்க மறுத்து வருகிறது. இதனால் வருகிற 16-ம் தேதி மின்வாரிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் மின்வாரியப் பணியாளர்களின் ஊதிய உயர்வு சம்பந்தமாகத் தொழிற்சங்கங்களை உடனடியாக அழைத்துப் பேசவேண்டும் என அரசுக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 1.12.2015 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய புதிய ஊதிய விகிதம் இன்று வரையிலும் இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.  நிலுவைத்தொகை மறுப்பதற்கான உத்தியாகவே திட்டமிட்டுக் காலதாமதத்தை மின்வாரியமும், அரசும் ஏற்படுத்தி வருகின்றன. ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படவிருப்பதாக தொழிற்சங்கங்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அமைச்சரும், அரசும், கண்ணாமூச்சியாடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் மின்வாரியத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 

இதற்கான அறிவிப்பை ஜனவரி மாதமே கொடுக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை உருப்படியான எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாகவே தெரியவில்லை. வேலைநிறுத்தம் செய்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் திசை திருப்ப முயல்வது நியாயமான அணுகுமுறை அல்ல. மின்வாரியத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. எனவே, மின்சார வாரியமும், தமிழக அரசும் உடனடியாகத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!