`நீட் தேர்வால் சாமான்ய மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு!' - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

'முறைகேடு இல்லாத நீட் தேர்வு வந்தால், தே.மு.தி.க ஆதரிக்கும்' என விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதால், இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்குப் பயிற்சி பெறும்விதமாக பள்ளிகளில் அரசு சார்பாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இருப்பினும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தே.மு.தி.க ஆதரவு தெரிவித்து வருகிறது. நேற்று முன்தினம், சென்னை அம்பத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மாணவர்கள் பணம் கொடுத்து மருத்துவ சீட் பெற முடியாததால், நீட் தேர்வு அவசியம் என்று தெரிவித்தார். 

இதேபோல பிரேமலதா விஜயகாந்த்தும் நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், 'பலகோடி ரூபாய் கொடுத்து மருத்துவம் படிக்க வேண்டிய நிலை உள்ளது. நீட் தேர்வு வந்தால்,  சாமான்ய மக்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு ஏற்படும். முறைகேடு இல்லாத நீட் தேர்வு வந்தால், தே.மு.தி.க ஆதரிக்கும். இருப்பினும், ஆண்டாள் மற்றும் நீட் விவகாரங்களை வைத்து பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று முடிவு செய்துகொள்ளக்கூடாது. எங்களுக்கு என்று தனிக்கொள்கை உள்ளது. ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கக் கூடாது' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!