`ஜெ. படத்திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்காதது ஏன்?' ஜெயக்குமார் விளக்கம்

ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது. முதல்வர் மற்றும் துணைமுதல்வர் முன்னிலையில் சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைத்தார். குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை பேரவையில் திறக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முன்னதாகப் படத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால், அவர் நேரம் ஒதுக்காததால் சபாநாயகரை வைத்துத் திறந்தனர். 

இந்த நிலையில் படத்திறப்பு விழாவில் பிரதமர் பங்குபெறாதது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், "ஜெயலலிதா படத்தை சபாநாயகர் திறந்ததில் எந்தத் தவறும் இல்லை. ஜெயலலிதா நினைவு மண்டபம் உள்ளிட்ட பிரமாண்ட நிகழ்ச்சிகள் உள்ளன. நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது. அனைத்து நிகழ்வுக்கும் பிரதமரை அழைத்தால் அ.தி.மு.க., பா.ஜ.க-வுடன் கூட்டணி என சிலர் விமர்சிப்பார்கள். அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை மாநிலத்தின் வளர்ச்சிக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்கிறோம். பேரவையில் படத்தை திறக்கக் கூடாது என காழ்ப்புஉணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!