வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (14/02/2018)

கடைசி தொடர்பு:16:20 (14/02/2018)

`முதலமைச்சர் போர்டை மட்டும் மாட்டிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி' - கிண்டலடித்த பெரியசாமி

மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறையில்லாதவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் முதல்வர் என்ற போர்டை மட்டும் தனக்கு மாட்டிக் கொண்டிருக்கிறார் என திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சாடியுள்ளார்.

ஐ.பெரியசாமி

  
தஞ்சாவூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் திமுகவின் முன்னாள் அமைச்சரான ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பேசினார். அதில், "திமுக தலைவர் கலைஞர் மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர். அதை இந்த அரசு மறைக்கப் பார்க்கிறது, வரலாற்றை என்றும் மறைக்க முடியாது. கவர்னர் வந்து பல மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார். தர்மபுரியில் ஆய்வு செய்த போது நான் ஐந்து ஆண்டு காலம் கவர்னராக தொடர்வேன் என்கிறார். அதுவும் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனை வைத்துக்கொண்டே சொல்ல அவர் கூனிக் குறுகி நின்றார். மக்களிடம் குறைகளை கேட்ட கவர்னர் அதை தீர்த்து வைப்பதற்கு அவரிடம் என்ன அதிகாரம் இருக்கிறது. இதை எதிர்த்து முதல்வரால் குரல் கொடுக்க முடியவில்லை. ஒரு வேளை கவர்னர் சொல்வது போல் நடக்கவும் வாய்ப்பிருக்கிறது ஏன் என்றால் பிஜேபி அரசுதானே தமிழக ஆட்சியாளர்களை ஆட்டிவிக்கிறது.

ஐ.பெரியசாமி

கருகும் காவிரி பயிர்களைக் காப்பாற்ற ஒரு முறையாவது தண்ணீர் திறக்கச் சொல்லுங்கள் என சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம். அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவி சாய்க்கவில்லை. முதலமைச்சர் என்ற பதவிக்குத் தகுதியில்லாதவர் அவர். முதலமைச்சர் என்ற போர்டை மட்டும் மாட்டிக்கொண்டிருக்கிறார். மக்கள் பிரச்னைகள் தீர்ப்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை. இருக்கிறவரை லாபம் என்கிற நோக்கில்தான் ஆட்சி நடத்துகிறார்கள். பஸ் கட்டணத்தை உயர்த்தியதிலிருந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அரசிற்கு ஒரு நாளுக்கு ரூ.3500 கோடி வருமானம் கிடைக்கிறது. இதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுபோல் ஒரு முறை கலைஞர் ஆட்சியில் வெறும் இரண்டு சதவிகிதம் பஸ் கட்டணம் உயர்த்தபட்டது. அப்போது மக்கள் இன்னல்படுகிறார்கள் எனத் தெரிந்து மீண்டும் பஸ் கட்டணத்தைக் குறைத்தார்.

ஆர்.கே நகர் தேர்தலில் அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் பணம் கொடுத்தார்கள். இரண்டாயிரம் நோட்டு  மூன்றை அதுவும் சாலையில் நின்று கொண்டு கூவிக் கூவிக் கொடுத்தார்கள். ஒரு ஆளும் கட்சியில் இருப்பவர்கள் நடு ரோட்டில்  நின்று பணம் கொடுத்து சரித்திர சாதனை படைத்தார்கள். இவ்வளவு பணம் கொடுத்தும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை என்பதோடு பணம் கொடுக்கவில்லை என்றால் பத்தாயிரம் ஓட்டுகள் கூட வாங்கியிருக்கமாட்டார்கள். வரும் தேர்தலில் அதிமுகவினர் மக்கள் மன்றத்தில் சென்று ஓட்டுக் கேட்க முடியாது. ஏதாவது ஒரு லாட்ஜில் இருந்துகொண்டுதான் தேர்தலைச் சந்திக்க முடியும். ஏனென்றால் அவர்கள் மக்கள் பிரச்னைக்காக உழைக்கவில்லை. திமுக தான் மக்களுக்காகவும் அவர்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவும் என்றைக்குமே உழைக்கும் பாடுபடும் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க