`ஜெயலலிதா கைரேகையைப் பெறச் சொன்னது யார்?' - மருத்துவர் பாலாஜி விளக்கம்

ஜெயலலிதா கைரேகையை பெறச் சொன்னது யார் என மருத்துவர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவர் பாலாஜி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தேகம் கிளப்ப, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு அறிவித்தது. இதற்காக எழிலகத்தில் தனி அலுவலகம் ஒதுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் மூன்றாவது முறையாக நேற்று மருத்துவர் பாலாஜி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம், தஞ்சை அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அதற்கு  சுகாதாரத்துறை செயலாளரின் வாய்மொழி உத்தரவின் பேரில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது என பாலாஜி தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இந்தத் தகவல்களுக்கு பாலாஜி மறுப்புத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், "சுகாதாரத்துறை செயலாளர் கூறியதன் பேரில் ஜெயலலிதாவிடம் நான் கையொப்பம் பெறவில்லை. தேர்தல் ஆணைய விதிப்படியே ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது" எனத் தெரிவித்தார். முன்னதாக சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!