வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (15/02/2018)

கடைசி தொடர்பு:17:24 (15/02/2018)

நாடாளுமன்றத்தில் காவிரி குறித்துப் பேச தடுத்த 3 காரணங்கள்! புதிரை உடைக்கும் அ.தி.மு.க எம்.பி வைத்திலிங்கம்

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நான் காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாகப் பேச இருந்தேன். ஆனால், முதல் நாள் கூட்டத் தொடர் அமளியில் முடிந்தது. இரண்டாம் நாள் பிரதமர் மோடி அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார். மூன்றாம் நாளில் நான் கட்சி மற்றும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வந்துவிட்டேன் அதனால் நான் நினைத்ததுபோல் காவிரி குறித்துப் பேச முடியாமல் போய்விட்டது என அ.தி.மு.க எம்.பி வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

வைத்திலிங்கம் அதிமுக எம்பி

காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்டத்தில் நெற்பயிர்கள் எல்லாம் கருகி வருகிறது. ஒரு முறையாவது கர்நாடக அரசு தண்ணீர் திறந்தால்தான் பயிருக்கு உயிர் கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வு செழிக்கும். ஆனால், கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும் திறக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார்கள் அங்கே ஆட்சியில் இருப்பவர்கள். நடுநிலையாக இருந்து தண்ணீரை வாங்கித் தர வேண்டிய மத்திய அரசு மௌனம் காத்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இதைக் கண்டித்து டெல்டா பகுதி விவசாயிகள், பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலவித போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த விஷயத்தில் அ.தி.மு.க அக்கறை காட்டவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் எழுதினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதற்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்லாமல் அலட்சியம் காட்டுவதாக அ.தி.மு.க மீது புகார் வாசிக்கிறார்கள் விவசாயிகள்.

இந்த நிலையில் தஞ்சாவூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளைப் பிரமாண்டமாகக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சரும் எம்.பி-யுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, அம்மா மறைந்த பிறகும்கூட அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் இவ்வளவு எழுச்சியோடும் சிறப்போடும் அவர் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்களே என வியக்கும் அளவுக்கு கொண்டாட வேண்டும். அதோடு காவிரியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் எல்லாம் கருகத் தொடங்கியுள்ளது. இது குறித்தும் கர்நாடக அரசிடம் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் நான் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேச இருந்தேன். ஆனால், அன்றைக்கு ஒரு நாள் முழுவதும் பெரும் அமளி ஏற்பட்டு கூட்டத்தொடர் முடிந்துவிட்டது. மறு நாள் பிரதமர் மோடி அவர்கள் அதிகளவு நேரத்தை எடுத்துக் கொண்டு பேசியதால் எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மறு நாள் கூட்டம் நடந்தது. ஆனால், தஞ்சாவூரில் கட்சி மற்றும் திருமண நிகழ்ச்சிகள் இருந்ததால் நான் இங்கு வந்துவிட்டேன். அதனால் என்னால் காவிரி குறித்துப் பேச முடியவில்லை" எனப் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க