'வேலைநிறுத்தத்தை கைவிடுங்கள்' - தங்கமணி கோரிக்கை! | Do not involve the strike minister thangamani requested to electricity workers

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (15/02/2018)

கடைசி தொடர்பு:19:20 (15/02/2018)

'வேலைநிறுத்தத்தை கைவிடுங்கள்' - தங்கமணி கோரிக்கை!

மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்கமணி

ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம், கணக்கீட்டுக் காரணி 2.57 சதவிகிதம், பஞ்சப்படி 125 சதவிகிதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர்கள் நீண்ட நாள்களாகப் போராடி வருகின்றனர். இதற்காக மின்வாரியத் தொழிற்சங்கங்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் அரசுத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைக்குத் தமிழக அரசு செவி சாய்க்க மறுத்து வருகிறது. இதனால் நாளை முதல் மின்வாரிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன. இதுகுறித்த நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் வேலைநிறுத்தப் போராட்டம் நாளை தொடங்குகிறது. சிஐடியூ உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இந்தநிலையில் மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார். 

அதில், "வேலைநிறுத்தத்தை மின்வாரிய ஊழியர்கள் கைவிட வேண்டும். 14 சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்துள்ளன. மின்வாரிய தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயார். 7வது ஊதியக்குழுவுக்குப் பிறகே பேச்சுவார்த்தையைத் தொடங்கினோம். இதனால் தாமதமாக தொடங்கியதாகக் கூற முடியாது. அரசின் பேச்சுவார்த்தையில் சிஐடியூ பங்குபெறாமலேயே வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பொறுப்பேற்று நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சில தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு வேலைநிறுத்தம் செய்கின்றனர். தமிழக பஸ் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடும் சிஐடியூ, கேரள பஸ் கட்டண உயர்வுக்கு ஏன் போராடவில்லை. வேலைநிறுத்தம் நடந்தாலும் நாளை மின்தடை ஏற்படாது. இதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஏதும் இடையூறு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க