Published:Updated:

முத்துக்குமாரசாமி... கடந்த வருடம் அந்த மனிதர் உயிரோடு இருந்தார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முத்துக்குமாரசாமி... கடந்த வருடம் அந்த மனிதர் உயிரோடு இருந்தார்!
முத்துக்குமாரசாமி... கடந்த வருடம் அந்த மனிதர் உயிரோடு இருந்தார்!

முத்துக்குமாரசாமி... கடந்த வருடம் அந்த மனிதர் உயிரோடு இருந்தார்!

பிரீமியம் ஸ்டோரி

நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். வேளாண்மைத் துறையில் டிரைவர் பணி நியமனத்துக்குத் தேர்வானவர்களிடம் லஞ்சம் வசூலித்து தருமாறு, முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் நெருக்கடி கொடுத்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் சிக்கிய ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார்,  ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ‘என் மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும்’ என ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்துள்ளார்.

முத்துக்குமாரசாமி... கடந்த வருடம் அந்த மனிதர் உயிரோடு இருந்தார்!

முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினர் உயிருக்கு அஞ்சி சென்னையில் குடியேறிவிட்டனர். ஓராண்டு முடிவடைந்த நிலையில், அவரது வீடு ஆள் அரவம் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. அவர் பயன்படுத்திய மோட்டார் பைக் தூசி படிந்து கிடக்கிறது. இந்த நிலையில், முத்துக்குமாரசாமியின் சர்ச்சைக்குரிய மரணம் குறித்து நம்மிடம் பேசிய எழுத்தாளரான நாறும்பூநாதன், ‘‘அது ஒரு கொடூரமான சம்பவம், தற்கொலைக்கு முன்பாக அவரது மனம் எந்த அளவுக்கு புண்பட்டுப் போயிருக்கும்? ஓய்வுபெற மூன்று மாதங்களே இருந்த சூழலில், இவனுங்க நம்மை நல்லபடியாய் பணிநிறைவு செய்யவிட மாட்டாங்க என்கிற சிந்தனை, அவருக்கு மிரட்சியைக் கொடுத்திருக்கும். ஏழு பணியிடங்களுக்கும் ரூ.14 லட்சத்தை எங்கேபோய் திரட்டுவது என்கிற சோகம் மனதை அடைத்திருக்கும். 

நெல்லைக்கு சற்றே தள்ளி இருக்கும் மணியாச்சி ரயில் நிலையத்தில், அக்கிரமம் செய்த ஆஷ் துரையை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டான் வாஞ்சிநாதன். அதற்கு 20 மைல் முன்பாக இருக்கும் தச்சநல்லூர் ரயில் தண்டவாளத்தில் அக்கிரமம் செய்பவர்களை எதுவும் கேட்க முடியாத கையறு நிலையில், துன்பப்படுத்திக்கொண்டிருந்த அலைபேசியை தூக்கி எறிந்துவிட்டு தன்னைத்தானே மாய்த்துக்கொண்டார் நேர்மையான இந்த அதிகாரி.

சாவில் மர்மம் இருப்பதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சர்ச்சையைக் கிளப்பினார். மார்க்சிஸ்ட்கள் கண்டித்தார்கள். மார்ச் 7-ல் மந்திரி பதவியில் இருந்து சம்பந்தப்பட்ட அமைச்சர் நீக்கப்பட்டார். ஏப்ரல் 5-ல் கைதுசெய்யப்பட்டார்.

இடையிடையே சமரசப் பேச்சும் தொடர்ந்தது. ‘நடந்தது நடந்துபோச்சு. உங்க பையனுக்கு எல்காட்டில் வேலை போட்டுத் தருகிறோம் என்று தூதுவிட்டதாகச் சொன்னார்கள். விவசாயத் துறைக்கும் ஐ.டி துறைக்கும் என்ன சம்பந்தம் என்றும் தெரியவில்லை. மங்களகரமான ஒரு வெள்ளிக்கிழமை இரவில், முத்துக்குமாரசாமியின் குடும்பமே வீட்டைக் காலி செய்துவிட்டு எங்கேயோ போய்விட்டது. நேர்மையாளனாக இருந்த ஒரே காரணத்துக்காகத் தற்கொலைக்குத் தூண்டிய நபர்களை முத்துக்குமாரசாமியின் மனசாட்சி காறித் துப்பியிருக்கும்” என்று ஆதங்கப்பட்டார்.

முத்துக்குமாரசாமியின் உறவினரும் சமூக ஆர்வலருமான வழக்கறிஞர் பிரம்மா, ‘‘இந்த விவகாரம் தொடர்பாக 20-க்கும் அதிகமான போஸ்டர்களை ஒட்டி அரசுக்கும் காவல் துறைக்கும் நெருக்கடி ஏற்படுத்தி வருபவர். அவரிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர், முன்னாள் அமைச்சர். சி.பி.சி.ஐ.டி விசாரித்தால், தன் குற்றத்தைத் தானே விசாரிப்பதுபோல இருக்கும். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் வெளியே வரும்.

முத்துக்குமாரசாமி... கடந்த வருடம் அந்த மனிதர் உயிரோடு இருந்தார்!

முத்துக்குமாரசாமி தற்கொலை நடந்த இடத்துக்கு ஒன்றரை கி.மீ தூரத்தில் இருக்கும் ரயில் நிலையம் முன்பு அவரது பைக் இருந்ததாக எட்டு நாட்களுக்குப் பிறகு போலீஸ் சொன்னது. அவர் அங்கே பைக்கை நிறுத்திவிட்டு பிளாட்பாரம் வழியாக நடந்து சென்றிருந்தால் அங்கு இருக்கும் 42 கண்காணிப்பு கேமராக்களில் ஒன்றிலாவது பதிவாகி இருப்பார். ஆனால், தகவல் அறியும் சட்டத்தில் நான் அதைக் கேட்டதற்கு அவரது உருவம் பதிவாகவில்லை என பதில் வந்திருக்கிறது.

அப்படியானால், சாவதற்காக அவர் பஸ் ஏறிச் சென்றாரா? 600 கி.மீ தூரத்துக்கு அப்பால் இருந்த பெரிய மனிதர்கள் போனில் மிரட்டினார்கள் என்பது ஒரு பக்கம். உள்ளூர் அரசியல்வாதிகள் யாரும் நெருக்கடி கொடுக்கவில்லையா? அவர்கள் யாரையும் இதுவரை விசாரிக்கவில்லை என்பது மர்மமாக இருக்கிறது. இந்த வழக்கில் இன்னும் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆளும் கட்சியினர் என்பதால், போலீஸ் உண்மையை மறைக்கப் பார்க்கிறது. முழு உண்மையும் வெளிவரும் வரையிலும் நான் தொடர்ந்து போராடுவேன்” என்றார் ஆவேசமாக.

சைவப் பிள்ளை சங்கத்தின் மாவட்டத் தலைவரான புளியரை ராஜா, சுதேசி இயக்கத் தலைவர் பந்தல் ராஜா உள்ளிட்டோர் தேர்தல் சமயத்தில் இந்த விவகாரத்தைக் கிளப்பி அரசியல் சூட்டை ஏற்படுத்தத் தயாராகி வருவதால், அவர்களைச் சமாளிக்க அரசுத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு