Published:Updated:

அம்பானி சொந்தம்.. ட்ரம்ப் நட்பு... 11 ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடி யார்?

அம்பானி சொந்தம்.. ட்ரம்ப் நட்பு... 11 ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடி யார்?
அம்பானி சொந்தம்.. ட்ரம்ப் நட்பு... 11 ஆயிரம் கோடி மோசடி செய்த நிரவ் மோடி யார்?

சத்தமே இல்லாமல் இந்திய வங்கித்துறையின் மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 280 கோடி ரூபாய் மோசடியையும், 11 ஆயிரம் கோடி முறையற்ற பரிவர்த்தனைகளையும் அரங்கேற்றியிருக்கும் நகைக்கடை அதிபர்தான் நிரவ் மோடி.

குஜராத்தில் பிறந்து பெல்ஜியத்தில் வளர்ந்த பிரபல நகை வியாபாரி நிரவ் மோடி, இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் தொழிலதிபர்களுடனும், அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இதன் உச்சம் என்னவென்றால் 2015ம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் இவரது கடையைத் திறந்து வைக்கும் அளவுக்குச் செல்வாக்கு நிறைந்த நபர். இதுமட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் தூரத்து உறவினர். 

என்ன ஊழல் செய்தார்?

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்களின் உதவியுடன் ''லெட்டர் ஆஃப் அன்டர்டேக்கிங்'' எனும் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் குறுகிய கால கடனை எந்த வரம்பும் இல்லாமலும், வங்கியின் கவனத்துக்கு வராமலும் பெற்றுள்ளார். இதன் மதிப்பு சுமார் 11,400 கோடி ரூபாயாக உள்ளது. இதுதான் இந்தியாவின் வங்கித்துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய மோசடியாக பதிவாகியுள்ளது.

எப்படி வெளிச்சத்துக்கு வந்தார்?

வங்கி இதுவரை வழங்கியுள்ள கடன்களை கணக்கிடும்போது பணப்பரிவர்த்தனைகளில் சில கணக்கில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதில் இரண்டு அதிகாரிகள் எந்த வித பரிவர்த்தனையையும் பதியாமல் கடன்களை வாரி வழங்கியுள்ளது தெரியவந்தது. இதன் மூலம் சிபிஐயில் வழக்குப் பதிவு செய்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. இது ஒரே நாளில் நடந்தது அல்ல. பல வருடங்களாக நடந்துள்ளது என்றும் கூறியுள்ளது. 

யாருக்கெல்லாம் தொடர்பு?

நிரவ் மோடிக்குத் தொடர்புடைய சோலார் எக்ஸ்போர்ட்ஸ், ஸ்டெல்லர் டைமண்ட்ஸ் மற்றும் டைமண்ட் ஆர் யூஎஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் தொடர்புள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இதுதவிர கீதாஞ்சலி ஜெம்ஸ், கில்லி இந்தியா மற்றும் நக்‌ஷத்ரா நிறுவனங்களுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்னை குறித்து நிரவ் மோடியிடமிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

பறிமுதல் செய்த அமலாக்கத்துறை

சிபிஐ பதிவு செய்த இரண்டு வழக்குகள் தொடர்பாக நிரவ் மோடிக்குச் சொந்தமான பல இடங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர் 5100 கோடி மதிப்புள்ள வைர நகைகளை அவரது பல கிளைகளிலிருந்து கைப்பற்றியுள்ளனர். இதோடு வருமான வரித்துறை சென்ற வருட ஜனவரியில் நடத்திய ரெய்டின் போது கைப்பற்றிய ஆவணங்களையும் அமலாக்கத்துறையிடம் வழங்குமாறு கேட்டுள்ளது. 

எங்கு இருக்கிறார் நிரவ் மோடி?

நிரவ் மோடி, அவரது சகோதரர், மனைவி மற்றும் அவரது உறவினர் ஒருவர் என நான்கு பேரும் பிப்ரவரி முதல் வாரத்தில் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். தற்போது நிரவ் மோடி நியூயார்க்கில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சரிந்ததா பஞ்சாப் நேஷனல் வங்கி?

இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தபின்பு பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகளின் விலை சரமாரியாக குறைந்தது. 52 வார குறைந்த மதிப்பையும் எட்டியது. 20.6 சதவிகித விலையை கடந்த இரண்டு நாள்களில் இழந்துள்ளது. இதேபோல கீதாஞ்சலி, ஜெம்ஸின் பங்குகளும் இதே அளவு இறக்கத்தை சந்தித்தது.

அரசியல் டாக்:

இந்த ஊழலில் அரசியல் தலையீடுகள் உள்ளன. நிரவ் மோடியை முன்பே தடுத்திருக்கலாம். அவர் தப்பித்துச் செல்ல வழிவகை செய்துவிட்டனர் எனப் பலரும் தங்கள் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரான அஷூடோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நிரவ் மோடி மீது போடப்பட்ட 42 எஃப்.ஐ.ஆர்கள் 2016 ஜூலை மாதத்திலிருந்து இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. ஆனாலும் அதை கண்டுகொள்ளாமல் டாவோஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நிரவ் மோடியைச் சந்தித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். 

ஐபிஎல் ஊழல் வழக்கில் லலித் மோடி, வங்கி வாரக்கடன் வழக்கில் விஜய் மல்லையா, இப்போது நிரவ் மோடி எனப் பெரும் பணக்காரர்களின் ஊழல் அதிகரித்து வருகிறது இதற்கெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது அரசு? மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கோடியில் புரள்கிறவர்களை கண்டுகொள்ளப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது!