``நாங்கள் ஏமாற்றப்படுகிறோம்'' - பா.ஜ.க-வை எச்சரித்த சந்திரபாபு நாயுடு!

பட்ஜெட்டில் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்தால் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனத் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார். 

சந்திரபாபு நாயுடு

சமீபத்தில் வெளியான 2018-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டில் ஆந்திர மாநிலம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறி பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேற நினைத்து அதற்கான ஆலோசனைக் கூட்டத்தையும் தெலுங்கு தேசம் கட்சி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த முடிவை கைவிட்ட தெலுங்கு தேசம், சிறப்பு நிதி பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவது என முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தெலுங்கு தேசம் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்தாம் இதுவரை மத்திய அரசை நேரிடையாக விமர்சித்து வந்தனர். இந்தநிலையில் அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மறைமுகமாகப் பா.ஜ.க-வை விமர்சித்துள்ளார். ஆந்திர தலைநகரம் அமராவதியில் பட்ஜெட் குறித்த கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட சந்திரபாபு நாயுடு, "ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி பிரித்தது. அதற்கான பயனாகத்தான் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் டெபாசிட் இழந்தது. மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும்போது ஆந்திர மாநிலத்துக்கென சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அளித்த உறுதிமொழியை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இதேபோல் பட்ஜெட்டில் அளிக்கும் நிதியும் போதுமானதாக இல்லை. தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என மக்கள் நினைத்துவிட்டால் அவர்களின் நம்பிக்கையை நாம் இழந்துவிடுவோம். அதற்குத் தகுந்த விலையைத் தேர்தலின்போது நமக்கு மக்கள் கொடுப்பார்கள். ஒவ்வொரு துறை வாரியாக முன்னேற்றத்தைக் கொண்டுவர முயற்சி எடுத்துவருகிறோம். விரைவில் நல்ல முன்னேற்றத்தை ஆந்திர மாநிலம் எட்டும்" என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!