'விமர்சனங்களை மீறி வெற்றி' - எடப்பாடி பெருமிதம்! | Edappadi palanisamy government completes one year

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:11:39 (18/02/2018)

'விமர்சனங்களை மீறி வெற்றி' - எடப்பாடி பெருமிதம்!

ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகிவிட்டது என முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது. இந்த சமயத்தில் தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் உருவெடுத்தன. குறிப்பாக டெங்கு, நீட் தேர்வு, காவிரி நீர், மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தமிழகத்தை உலுக்கின. இதேபோல் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், குட்கா வழக்கு, ஆர்கே நகர் தேர்தல் என அரசியல் சூழ்நிலைகளும் மாறின. இருப்பினும் பிரச்னைகளுக்கு மத்தியில் ஆட்சியை நடத்தி வந்த அவர் முதல்வராக பதவியேற்று ஒரு வருடத்தை நிறைவு செய்துவிட்டார். நேற்று முன்தினத்துடன் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்றுவிட்டது. இதை விழா எடுத்து கொண்டாட உள்ளதாக ஏற்கனவே அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 

இந்தநிலையில், விமர்சனங்களை கடந்து வெற்றிகரமாக ஆட்சி நடைபெற்று வருவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், "ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எண்ணியவர்களின் எண்ணம் கானல் நீராகிவிட்டது. எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும் மீறி ஓராண்டாக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவிரி விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். காவிரி வழக்கில் இதற்கு முன்னர் வந்துள்ள உத்தரவு வேறு, இப்போது வந்துள்ள உத்தரவு வேறு. நீர் அளவு குறைப்பு ஏமாற்றம் அளித்தாலும் பல்வேறு அம்சங்கள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன. குறிப்பாக காவிரி ஆற்றை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றதும் தமிழக பாசன பரப்பளவை குறிப்பிட்டு உள்ளதும் வரவேற்கதக்கதாக இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு அமைக்கும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க