வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (18/02/2018)

கடைசி தொடர்பு:14:30 (18/02/2018)

``அ.தி.மு.கவை பிரதமர் அலுவலகம் இயக்குவது நிரூபணமாகியுள்ளது!’’ - முத்தரசன் பேச்சு

அ.தி.மு.கவை பா.ஜ.க. இயக்குகிறது என்பது ஓ.பன்னீர்செல்வம் பேசியதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

முத்தரசன்

பிரதமர் மோடி கூறியதால் தான் அ.தி.மு.க. இணைப்புக்கு ஒத்துக்கொண்டேன் என துணைமுதல்வர் ஓபிஎஸ் தேனியில் பேசியது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அ.தி.மு.கவை பாஜக தான் ஆட்டுவிக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அதனை நிரூபிக்கும் வகையில் ஓ.பி.எஸ். பேச்சு அமைந்ததாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அவரது பேச்சு தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து பேசிய தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், ``மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து அ.தி.மு.கவை இணைத்து வைத்துள்ளார்’’ என்று விமர்சித்திருந்தார். அதற்கு கட்டப்பஞ்சாயத்து எனக் கூறுவது தவறு, நல்லதை யார் கூறினாலும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்திருந்தார். 

இந்தநிலையில், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், "ஓ.பி.எஸ். பேசியதன் மூலம் அ.தி.மு.கவை பிரதமர் அலுவலகம் இயக்குகிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது. உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தலையீடு இல்லாமல் வங்கியில் மோசடி நடைபெறாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்ற அம்சம் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க