'கமல் பாணி வேறு; என்னுடைய பாணி வேறு' - ரஜினிகாந்த்

சினிமாவைப் போல அரசியலிலும் என்னுடைய பாணி வேறு கமல்ஹாசனுடைய பாணி வேறு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

பிப்ரவரி 21ம் தேதி அரசியல் சுற்றுப் பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன். அன்றே மதுரையில் பொதுக்கூட்டத்தையும் நடத்த உள்ளார். அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் தனக்கு பிடித்தமான மனிதர்களை சந்திக்கிறேன் என்று கூறி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்த கமல்ஹாசன் தொடர்ந்து, இன்று (18.2.2018) நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். சென்னை போயஸ் இல்லத்தில் உள்ள வீட்டில் நடைபெற்ற சந்திப்பில் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அப்போது ரஜினிக்கு அவர் அழைப்பு விடுத்தார். இது அரசியல்ரீதியான சந்திப்பில்லை; நட்பு ரீதியிலான சந்திப்பே என்று நடிகர் கமல் விளக்கம் கொடுத்திருந்தார்.  

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "பணம், புகழுக்காக கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வருகிறார். அரசியல் பயணத்தில் அவருக்கு வெற்றி உண்டாகட்டும். ஆண்டவனின் ஆசிர்வாதம் அவருக்கு கிடைக்கும். அரசியலில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சினிமாவின் கமல் பாணி வேறு, என்னுடைய பாணி வேறாக இருக்கும். அதேபோல் அரசியலிலும் கமல் பாணி வேறு, என்னுடைய பாணி வேறாக இருக்கும். அவரின் அனைத்து பயணங்களும் வெற்றிபெற ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!