நவீன வசதிகளுடன் கூடிய 4 மாடிகள் கொண்ட பா.ஜ.கவின் புதிய தலைமை அலுவலகம்!

அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பா.ஜ.கவின் புதிய தலைமை அலுவலகத்தை பிரதமர் மோடி இன்று (18.2.2018) திறந்து வைத்தார். 

பாஜக புதிய அலுவலகம்

டெல்லி அசோகா சாலை பகுதியில் பா.ஜ.கவின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்தப் பகுதியில் உள்ள கட்சி அலுவலகங்கள் மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தீன்தயாள் உபாத்யாய் மார்க்கில் பா.ஜ.கவின் புதிய தலைமை அலுவலகம் கட்டுவதற்கான பணிகளைக் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஒன்றரை ஆண்டுகளுக்குள் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று திறப்பு விழா நடைபெற்றது. புதிய அலுவலகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த புதிய அலுவலகம் ஆனது தகவல் தொழில்நுட்ப வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. 

இதில், செய்தியாளர்கள் அறை, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் அலுவலகம் முழுவதும் வைஃபை வசதி, 200 கார்கள் நிற்கும் அளவுக்கு அண்டர்கிரவுண்ட் பார்க்கிங், 450 பேர் உட்காரும் அளவுக்கு மீட்டிங் ஹால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் லட்யென்ஸ் பங்களா பகுதிக்கு வெளியே தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தை அமைத்த முதல் கட்சி பா.ஜ.கவாகும். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, "இந்தியாவில் வெவ்வேறு கொள்கைகள், கருத்துக்களுடன் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் இருப்பது ஜனநாயகத்திற்கு அழகு சேர்க்கின்றன. சுதந்திரத்துக்கு பின்னர் மிகப்பெரிய இயக்கங்களுக்கு ஜன சங்கத்தை சேர்ந்த தலைவர்களும், பா.ஜ.க. தலைவர்களுமே முன்னணி வகித்துள்ளனர். தேசபக்தியில் தீவிரமாக இருப்பதில் நமது கட்சி உறுதி பூண்டுள்ளது. பா.ஜ.கவின் செயல்பாடும், திட்டங்களும் உண்மையாக ஜனநாயக அடிப்படையில்தான் இருக்கும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!