காவிரி விவகாரம் - அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார் முதல்வர் பழனிசாமி! | All party meeting led by Chief Minister: tamilnadu government announced

வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (19/02/2018)

கடைசி தொடர்பு:17:10 (19/02/2018)

காவிரி விவகாரம் - அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார் முதல்வர் பழனிசாமி!

காவிரி விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமி

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில், நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட நீரின் அளவை விட 14.75 டிஎம்சி குறைத்து வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும், காவிரி மேலாண் வாரியத்தை 6 வாரத்தில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கமாக வழங்கப்படும் நீரின் அளவை குறைத்து அறிவித்ததுக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன. காவிரி விவசாயிகள், எதிர்க்கட்சிகள் எனப் பலரும் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க, வரும் 23-ம் தேதி, தி.மு.க தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். இதில் கலந்துகொள்ள அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

இதற்கிடையே, தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வராக எடப்பாடி பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அனைத்துக்கட்சி கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க