வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (19/02/2018)

கடைசி தொடர்பு:19:30 (19/02/2018)

அரசு அறிவிப்பு எதிரொலி - அனைத்துக் கட்சி கூட்டத்தை ரத்து செய்தார் ஸ்டாலின்!

திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், நடுவர் மன்ற மூலம் தமிழகத்துக்கு அளிக்கப்பட்ட  நீரின் அளவை விட 14.75 டிஎம்சி குறைத்து வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு தமிழகத்தில் கடும் அதிருப்தியை உண்டாக்கியது. இதனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக 23 ம் தேதி திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இதற்கிடையே, காவிரி விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டவல்லுநர்கள், மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் முதல்வர் தலைமையில் 22 ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அரசு அறிவித்தது. முதல்வராக எடப்பாடி பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அனைத்துக் கட்சி கூட்டம் இதுவாகும். அரசு சார்பில் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டதற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் தெரிவித்துள்ளதில், அரசு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதால் திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்று திமுக ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைக்கும். மேலும், கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க பிரநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க