வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (20/02/2018)

கடைசி தொடர்பு:11:55 (20/02/2018)

'தீர்ப்புக்கு' பிறகு தினகரன் கைகாட்டும் முதல்வர் இவர்தான்!

தினகரன்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதினெட்டுப் பேரின் சட்டமன்றப் பதவி பறிப்பு தீர்ப்பு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வர உள்ளது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு தமிழக அரசியல் களத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி அரசு கவிழ்ந்து தனது ஆதரவில்தான் புதிய அரசு அமையும் என்று உறுதியாக நம்புகிறார் தினகரன். தனது அணியிலிருந்து ஒருவரை முதல்வராகவும் அவர் இப்போது தேர்வு செய்துவிட்டார் என்ற தகவல் தினகரன் அணியில் பலமாக ஒலிக்கிறது. 

எடப்பாடி ஆட்சிக்கு எதிராகவும் மாவட்ட வாரியாக தனது செல்வாக்கை பலப்படுத்தவும் தினகரன், மக்கள் புரட்சி பயணத்தை தற்போது மேற்கொண்டு வருகிறார். பல இடங்களில் தினகரனுக்குக் கிடைத்துவரும் வரவேற்பு அவருக்கு உத்வேகத்தை கொடுத்து வருகிறது. அதே நேரம், தினகரனுக்கு மக்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு ஆளும் அ.தி.மு.க-வினரையும் யோசிக்க வைத்துள்ளது. குறிப்பாக சசிகலா ஆதரவு பெற்ற அமைச்சர்கள் பலரும் தினகரன் தரப்பிடம் சத்தமில்லாமல் தூது அனுப்பி வருகிறார்கள். இந்த நிலையில்,  ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே இடைவெளி அதிகரித்து வருவதால், விரைவில் கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்று சில அமைச்சர் ஓப்பனாகவே சொல்லியுள்ளார்கள். 

இந்தநிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பதினெட்டுப் பேர் தகுதி நீக்கம் செய்யபட்ட வழக்கின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அதோடு, தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வழக்கும் முடிவுக்கு வர இருக்கிறது. இந்த இரண்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்தே எடப்பாடி அரசின் ஆயுட்காலம் உள்ளது. தற்போது உள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். தினகரன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் அதே நேரம், ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கின் தீர்ப்பு பாதகமாக வந்துவிடும் என்கிற பயம் அங்கு நிலவுகிறது. குறிப்பாக ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விசயத்தில் அரசு தரப்பு வழக்கறிஞரின் செயல்பாடு  திருப்தி இல்லாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால் ஓ.பி.எஸ் அதிருப்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதையெல்லாம், அறிந்து தான் தினகரன் மக்கள் சந்திப்பை தீவிரப்படுத்தியுள்ளார் என்கிறார்கள். 

இந்த இரண்டு தீர்ப்புகளுக்குப் பிறகு சட்டபேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துவிடும் முடிவில் தினகரன் தரப்பு தயாராக இருக்கிறது என்று சொல்கிறார்கள். தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துவிட்டால், எடப்பாடி அணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தன்பின்னால் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தினகரன் கருதுகிறார். அதற்காக தான், தனிக்கட்சி திட்டத்தையும் அவர் தள்ளி வைத்துள்ளார் என்கிறார்கள். சட்டபேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து எடப்பாடி ஆட்சியை வீழ்த்தி தனது ஆட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார் தினகரன்.

வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்

மேலும், ஆட்சி தன்வசத்திற்கு வந்தாலும், தான் முதலமைச்சராக ஆகாமல் தனக்கு நெருக்கமான ஒருவரையே முதல்வராக்கும் முடிவில் தினகரன் இப்போதே திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். “எனக்கு முதல்வராகும் எண்ணம் இல்லை. எனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் ஒருவரைதான் முதல்வராக ஆக்குவேன். அந்த 18 பேரில் ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்” என்று தினகரன் சொன்னதன் பின்னணியும் இதுதான் என்கிறார்கள். தினகரனிடம் அவருக்கு நெருக்கமானவர்கள். தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டிருந்தபோது “நான் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை வரும்போது, முதல்வர் பதவியில் வெற்றிவேலை கொண்டு வரும் எண்ணம் உள்ளது. அவருடைய தியாகத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. தனிப்பட்ட முறையிலும் அவரை எனக்குப் பிடிக்கும். அதேபோல், பிற உறுப்பினர்களுக்கும் அவர்கள் எதிர்பார்க்காத அளவில் பதவிகளை கொடுத்து அழகு பார்ப்பேன்” என்று மனம்விட்டு சொல்லியுள்ளார். 

தினகரன் முதல்வர் சாய்ஸ் வெற்றிவேல்தான் என்பது அந்த அணியில் உள்ளவர்களுக்குப் பரவலாக இப்போதே தெரிந்துவிட்டது. பன்னீர் செல்வம், எடப்பாடி என்று தங்கள் குடும்பத்தால் கைகாட்டப்பட்டவர்களை முதல்வராக்கி அவர்களால் தங்களுக்கு ஏற்பட்ட வேதனைகளை தினகரன் மறக்கவில்லை. அதே நேரம், வெற்றிவேல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையும் அவரிடம் உள்ளது என்கிறார்கள். ஆட்சிக்கு முதலில் வரட்டும். அப்புறம் முதல்வரை பற்றி அவர் முடிவு செய்யட்டும் என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள். 


டிரெண்டிங் @ விகடன்