ஸ்லீப்பர் செல்கள் எப்போது வெளிப்படுவார்கள்? - டி.டி.வி.தினகரன் தடாலடி

ஸ்லீப்பர் செல்கள் எப்போது செயல்படுவார்கள் என்ற கேள்விக்கு, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., ஓப்பன் டாக்காக பதில் அளித்துள்ளார்.

டிடிவிதினகரன்

ஓ.பி.எஸ் தர்மயுத்தத்திற்கு, இரண்டாகப் பிரிந்த அ.தி.மு.க-வில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது எனத் தொண்டர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். ஆனால், அ.தி.மு.க-வின் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள், சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவிக்க, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அதன்பிறகு, டி.டி.வி. தினகரன் தரப்புடன் மோதல் ஏற்படவே, ஓ.பி.எஸ்ஸுடன் சேர்ந்து ஆட்சி நடத்திவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இருப்பினும், இருதரப்பு எம்.எல்.ஏ-க்களும் அவ்வப்போது அணி மாறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., அ.பிரபு, இன்று டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., சந்தித்ததுகுறித்து டி.டி.வி.தினகரன் விளக்கமளித்துள்ளார். அதில், "என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, ஸ்லீப்பர்செல் ஒன்றும் அல்ல. நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். ஈ.பி.எஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதால், ஓ.பி.எஸ் முதல்வர் பதவி கேட்கிறார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட 6 பேரைத் தவிர, அனைத்து எம்.எல்.ஏ-க்களும் எங்கள் அணியில் இணைந்துவிடுவார்கள். எம்.எல்.ஏ-க்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அனைத்துக்கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கது. சட்டசபையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருந்தால், வலிமையானதாக இருந்திருக்கும்" என்றார். 

முன்னதாக, சென்னை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், தினகரன் அணிக்கு மாறிய பிரபு எம்.எல்.ஏ குறித்து கேள்வி எழுப்பினர்.  அதற்குப் பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், பிரபு அணி மாறியதுகுறித்த தகவல்கள் எனக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. பிரபுவின் கருத்தை அறிந்த பின்புதான் பதிலளிக்க முடியும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!