இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியின் முழு சுற்றுப்பயண விவரங்கள்!

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடியின் சுற்றுப்பயண விவரங்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இத்திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இதேபோல் நாளை புதுச்சேரி ஆரோவிலில் நடைபெறும் நிகழ்விலும் பங்கேற்கிறார். இதற்கான முழுப்பயண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து விமானம் மூலம் மாலை 5.20 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். 

அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரவேற்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறில் உள்ள ஐ.என்.எஸ் கடற்படை தளத்துக்குச் செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்குச் சென்று பெண்களுக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டம் தொடங்கி வைக்கிறார். இதன்பின் மாலை 6.50 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு செல்லும் அவர், இரவு அங்கு தங்குகிறார். இதையடுத்து நாளை புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள செல்கிறார். இதற்கிடையே தமிழகம் வரும் பிரதமரை வரவேற்க, ஆளும் அ.தி.மு.க சார்பிலும் பா.ஜ.க சார்பிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!