'மத்திய அரசுக்கு அடி பணியவில்லை' - சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி! | We do not subordinate to central government says CM edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (27/02/2018)

கடைசி தொடர்பு:20:43 (27/02/2018)

'மத்திய அரசுக்கு அடி பணியவில்லை' - சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

மத்திய அரசுக்கு மாநில அரசு அடிபணிந்து செல்லவில்லை என முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசு மத்திய அரசுடன் நெருக்கம் காட்டி வருகிறது. குறிப்பாக ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு ஆதரவு தந்தது கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. பிரதமர் மோடியும் அதிமுகவின் அணிகளை இணைக்கக் கூறியதாக ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் பேச அதுவே சர்ச்சையானது. இதனால், தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், மத்திய அரசுக்கு நாங்கள் அடிபணிந்து செல்லவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த முடியும். தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த இந்த அரசு முனைப்புடன் உள்ளது. 

தமிழகத்தின் திட்டங்களுக்காகப் பல ஆயிரக்கணக்கான நிதியைத் தருவதாக மத்திய அரசு உறுதியளித்து. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கின்ற காரணத்தினாலே இந்த அளவுக்கு நிதியைப் பெற முடிந்தது. இதேபோல் கோதாவரி நீரை தமிழகத்துக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசுக்கு மாநில அரசு அடிபணிந்து செல்கிறது எனக் கூறுவது தவறு. காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தியதன் விளைவாகத் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. அதிமுகவின் கொள்கை வேறு, பாஜகவின் கொள்கை வேறு. மத்திய அரசில் திமுக பதவி வகித்தபோது மக்களுக்காக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை" என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க