Published:Updated:

இலங்கையில் திருப்பி அனுப்பப்பட்டார் திருமாவளவன்

கொழும்பு, பிப்.22,2011

இலங்கையில் திருப்பி அனுப்பப்பட்டார் திருமாவளவன்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். ##~~##

பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அதன்படி, இலங்கைச் சென்ற அவரை கொழும்பு விமான நிலையத்திலேயே அந்நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 

ஏன் அனுமதி இல்லை என்று திருமாவளவன் கேட்டதற்கு, "இது தொடர்பாக அரசின் உயர் மட்டத்தில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை," அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால், திருமாவளவன் வேறு வழியின்றி தான் சென்ற விமானத்திலேயே மீண்டும் சென்னைக்குத் திரும்பினார்.

இந்நிலையில், திருமாவளவன் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டமும் ராஜபக்ஷே உருவபொம்மை எரிப்புப் போராட்டமும் நடத்தி வருகின்றனர். சென்னையில் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.

தாம் திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

"தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் அன்னை பார்வதி அம்மாள் கடந்த 20-Š02-Š2011 அன்று அதிகாலையில் வல்வெட்டித்துறை பொது மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் இன்று (22-Š02-Š2011) மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கட்சிப் பொறுப்பாளர்கள் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா ஆகியோருடன் கொழும்பு சென்றோம்.

எமது குழுவினரை வல்வெட்டித்துறைக்கு அழைத்துச் செல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விமான நிலையத்தின் வெளியே காத்திருந்தனர்.

கொழும்பு விமான நிலையத்தில் சிங்கள அரசின் குடிவரவுத் துறை அதிகாரிகள் எங்களை வழிமடக்கி, இலங்கைக்குள் நுழைய உங்களுக்கு அனுமதியில்லை. இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள் என்று கூறினர்.

நாங்கள் பிரபாகரன் தாயாரின் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே வந்திருக்கிறோம். வேறெதுவும் உள்நோக்கம் இல்லை. ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும் என்று வாதாடினோம்.

அவ்வாறு அனுமதிக்க இயலாது. நீங்கள் வந்த அதே விமானத்தில் திரும்பிச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர்.

நான் ஏற்கனவே பலமுறை இலங்கைக்கு வந்திருக்கிறேன். இந்திய நாடாளுமன்றக் குழுவிலும் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும், இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட அவமானம் என்பதைவிட இந்திய அரசுக்கும், இந்திய தேசத்துக்கும் இழைக்கும் பெரும் அவமதிப்பே ஆகும். இதை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உரிமைப் பிரச்னையாக எழுப்புவேன் என்றும் எச்சரிக்கை விடுத்தேன்.

மேலும் என்னையும் என்னுடன் வந்தவர்களையும் எதற்காகத் திருப்பி அனுப்புகிறீர்கள் என்பது தொடர்பாக எழுத்து பூர்வமான அறிக்கையினை அளிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்தினேன். அவ்வாறு வழங்க இயலாது என்று மறுத்ததோடு எங்களை வலுக்கட்டாயப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.

பிரபாகரனுக்கு மட்டுமின்றி இனமான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனுக்கும் அன்னையாய் விளங்கும் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அனுமதிக்காத, ஈவிரக்கமில்லாத கொடுங்கோலன் ராஜபக்ஷேவையும் சிங்கள இனவெறி அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அன்னை பார்வதி அம்மாள் இறப்பையொட்டி ஈழத்தில் கறுப்புக்கொடிகள் ஏற்றக்கூடாது எனவும் ஆங்காங்கே அவரின் திருவுருப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தக்கூடாது எனவும் சிங்கள இனவெறியன் ராஜபக்ஷேவின் இராணுவ கொடுநெறி அரசு கெடுபிடி செய்து வருகிறது.

அன்னை பார்வதி அம்மாளுக்கு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தத் துடிக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட அஞ்சுகிற வகையில் ராஜபக்ஷேவின் இராணுவம் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

கடுகளவும் கருணையில்லாத கொடூரன் ராஜபக்ஷேவின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கு எல்லையற்று நீண்டுகொண்டே போகிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் சவால் விடுகிற வகையில் ராஜபக்ஷேவின் அணுகுமுறைகள் தொடர்கின்றன.

இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த இனவெறிபிடித்த கொலைவெறியன் ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை ஓர் பொருட்டாகவே மதிப்பதில்லை என்பது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான என்னை திருப்பி அனுப்பியதிலிருந்தே அறியலாம்.

இந்நிலையில் இந்திய, தமிழக அரசுகள் ராஜபக்ஷே கும்பலைக் கடுமையாக எச்சரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

மேலும் தமிழகத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

நேரிலே அஞ்சலி செலுத்த முடியாவிட்டாலும் அன்னை பார்வதி அம்மாளுக்கு இலட்சோபலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை தமிழகத்திலிருந்து செலுத்துகிறோம்," என்று திருமாவளவன் கூறியுள்ளார்.