Election bannerElection banner
Published:Updated:

"வரம்பு மீறிப் புகழப்பட்ட தலைவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்!” - தமிமுன் அன்சாரி

விகடன் விமர்சனக்குழு
"வரம்பு மீறிப் புகழப்பட்ட தலைவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்!” - தமிமுன் அன்சாரி
"வரம்பு மீறிப் புகழப்பட்ட தலைவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்!” - தமிமுன் அன்சாரி

"வரம்பு மீறிப் புகழப்பட்ட தலைவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்!” - தமிமுன் அன்சாரி

''வரம்புமீறிப் புகழப்பட்ட கட்சித் தலைவர்கள் அழிந்துபோன வரலாற்றை அறிவோம். எனவே, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரை வரம்புமீறிப் புகழாதீர்கள்'' என்று விழா மேடையிலேயே புகழ்ந்தவர்களைக் கட்சியின் பொருளாளர் கண்டித்தது தமிழக அரசியலில் புதிய பரிமாணமாகும்.  

நாகை அவுரித்திடலில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் சமூக நீதி மீட்புப் பொதுக்கூட்டம் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மாலை நடைபெற்றது.  இந்தக் கூட்டம் அ.தி.மு.க. கூட்டணியில் எம்.எல்.ஏ-க்களாக வெற்றிபெற்று மூவரணியாகச் செயல்படும் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரின் நிலைப்பாட்டை பறைச்சாற்றுவதாக இருந்தது. நாகை சட்டமன்றத் தொகுதியில் இரண்டு ஆண்டுகளாகத் தமிமுன் அன்சாரி செய்த செயல்களை விளக்கி தொகுதிச் செயற்பாட்டு அறிக்கையைப் பெங்களூரு முக்தார் அஹமது வெளியிட அதனை, குமாரசாமி குருக்களும், ரமேஷ் குருக்களும் பெற்றுக்கொண்டது மத நல்லிணக்க நிகழ்ச்சியாகும்.  

இந்த நிகழ்வில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும்;  மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை ரத்துசெய்ய வேண்டும்; மீனவர்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்; டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்; நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும்;  10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

ம.ஜ.க-வின் பொருளாளர் ஹாரூன் ரஷீது, ''நாங்கள் 10 கோடி ரூபாய், 20 கோடி ரூபாய் வாங்கிவிட்டோம் என்று ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுகிறார்கள்.  யாரிடமும் பைசா வாங்கி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில், தொண்டர்கள் மனது புண்படும் வகையில் செயல்பட்டிருந்தால், கட்சியின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.  இதே மேடையில் சிலர் பொதுச் செயலாளரை அதிகமாகப் புகழ்ந்தார்கள். இது வேண்டாம். வரம்புமீறிப் புகழப்பட்ட கட்சித் தலைவர்கள் அழிந்த வரலாறு நமக்குத் தெரியும்.  எனவே, யாரையும் வரம்புமீறிப் புகழாதீர்கள்'' என்று முடித்தார்.  

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, ''கமல், ரஜினி போன்ற மூத்த வயதான நடிகர்களுக்கு முதல்வர் அரியணையில் அமரும் ஆசை வந்துவிட்டது. ஒருவர், கட்சி தொடங்கிவிட்டார். இன்னொருவரோ சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியை ஆரம்பித்து நேராகக் கோட்டைக்கு வர ஆசைப்படுகிறார். தமிழ்நாட்டு மக்கள், இனியும் சினிமா மோகத்தை நம்பி ஏமாறமாட்டார்கள். காவிரி நீர், முல்லை பெரியாறு, மீனவர் எனப் பிரச்னைகள் நடந்தபோதெல்லாம் இந்த நடிகர்கள் குரல் கொடுத்தார்களா? காங்கிரஸ் கட்சியோ சினிமாவில் ஓய்வுபெற்ற நக்மா, குஷ்பு போன்ற நடிகைகளை நம்பி கட்சி நடத்துகிறது.  இதெல்லாம் ஆரோக்கியமான அரசியலா? இஸ்லாம் உள்ளிட்ட அனைத்துச் சமூக மக்களின் மேம்பாட்டுக்கும் எங்கள் கட்சித் துணை நிற்கும்'' என்றார்.  

நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸ், ''நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி தனியரசு பேசியதில் கோபமும் இருக்கிறது. அதில், நியாயமும் இருக்கிறது. தென் இந்திய நடிகர் சங்கப் பொறுப்பில் இருக்கும் என்னை வைத்துக்கொண்டே நடிகர், நடிகைகளைப் பற்றிப் பேசியிருக்கிறார்.  நான் அந்த வகையைச் சார்ந்தவன் அல்ல... அது அனைவருக்கும் தெரியும்.  நான் சாதிவெறியன் அல்ல... உணர்வாளன்.  தேவர் அய்யா காட்டிய வழியில் செயல்படுகிறேன். எனக்கு என் சமூகம் அடையாளம்.  எல்லோரும் சமூகத்தை விட்டொழித்து நாமெல்லாம் ஒரே மனித இனம் என்று வந்தால், அதில் சேருகிற முதல் நபராக நான் இருப்பேன்.  தமிழ் மொழி, இனம் காக்க மத நல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து செயல்படுவேன்'' என்றார்.  

இறுதியாக பேசிய ம.ஜ.க-வின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, ''சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் வகையில் துரோகச் செயல்கள் நடைபடுகிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனிதாவின் உடல், எரிக்கப்பட்ட சடலம் அல்ல... புதைக்கப்பட்ட நெருப்பு. அது, அணையாது.  சமூக நீதிக்காக ம.ஜ.க தொடர்ந்து போராடும்.  அதேநேரத்தில், முதல்வர் எடப்பாடியார் அவர்களிடம் நாகை தொகுதிக்கான கோரிக்கைகளைக் கொடுத்துள்ளேன். 

நாகை துறைமுகத்தை மேம்படுத்தித் தருதல், மருத்துவக் கல்லூரி அமைத்தல், திருமருகலை தனித் தாலுக்காவாக அறிவித்தல், நாகை - நாகூர் கடற்கரையை மேம்படுத்துதல், பனங்குடி ஏரியைச் செப்பனிடுதல், தாமரைக் குளத்தைச் சீரமைத்தல், நாகையில் பிறந்த மறைமலை அடிகளார் பெயரில் தனித் தமிழ் ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்தல், நாகூர் ஹனிபாவுக்கு நிகழ்ச்சி அரங்கத்துடன் கூடிய மணிமண்டபத்தை அமைத்து தருதல் போன்ற கோரிக்கைகளை இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்'' என்று முடித்தார்.  

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு