தள்ளிப்போன சட்டமன்றக் கூட்டத்தொடர் - சட்டசபைச் செயலாளர் பதவி நியமனம் காரணமா?

சட்டசபை

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 15 ஆம் தேதி  கூடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றச் செயலாளர் தேர்வில் ஒரு புறம் குழப்பம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகளும் தயாராகிவருகின்றன. 

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தது. அதன் தொடர்ச்சியாக மார்ச் முதல் வாரத்தில், தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு இதுகுறித்து முறையான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. எதற்காக சட்டமன்ற கூட்டத்தொடர் தள்ளிப்போகிறது என்ற கேள்வியும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்தது. 

இந்த நிலையில், தமிழக சட்டமன்றச் செயலாளராக இருந்த பூபதி கடந்த மாதம் 28 ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். தமிழக சட்டமன்றத்தில் செயலாளர் மட்டுமே சட்டமன்றக் கூட்டத்தொடரை முறைப்படி அறிவிக்கும் அதிகாரம் பெற்றவர். சட்டமன்ற அலுவல் நடைமுறைகள் இவரது மேற்பார்வையில்தான் நடைபெறும். புதிய சட்டமன்றச் செயலாளராக சீனிவாசனை நியமிக்க சபாநாயகர் தனபால் முயன்றுவந்தார். இதற்காக  சீனிவாசனுக்கு சட்டமன்றத் தனிச் சிறப்பு செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. ஆனால், சீனிவாசனைவிட சீனியர் அதிகாரிகள் மூவர் இருந்த நிலையில், சபாநாயகரின் இந்த தன்னிச்சை நடவடிக்கை சட்டமன்ற அலுவலக ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதே போல், சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கினால், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கெனவே தமிழகத்தின் நிதி நிலை மோசமாக உள்ள நிலையில், ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான துறைரீதியிலான ஆய்வுகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. மார்ச் 5 ஆம் தேதி ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டு மாநாடும், 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மட்டும் கலந்துகொள்ளும் மாநாடும், 7 ஆம் தேதி அன்று  காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாநாடும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முக்கிய விஷயங்கள் அலசப்படுகின்றன. 

சபாநாயகர்

அதேபோல், துறை செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டும் என்கிறார்கள். அதற்குள் சட்டசபை செயலாளர் தேர்வையும் முடித்துவிட உள்ளார்கள். ஏனெனில் சட்டசபை தனிச் சிறப்பு செயலாளராக சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மீது கவர்னரின் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இழுபறியால், சட்டசபைச் செயலாளராக சீனிவாசனைக் கொண்டுவரும் சபாநாயகர் தனபாலின் எண்ணம் ஈடேற முடியாத நிலை உள்ளது. விரைவில் இந்தப் பிரச்சனையில் ஒரு முடிவினை எட்ட சபாநாயகர் தரப்பிலிருந்து ஊழியர்களுடன் சமரசப் பேச்சு நடைபெற்று வருகிறது. 

ஆனால், மார்ச் மாதத்துக்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையும் இருக்கிறது. மார்ச் இறுதியோடு நிதி ஆண்டு முடிவதால், அதற்குமுன் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையில், வரும் மார்ச் 15 ஆம் தேதி அன்று தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தைத் தொடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள். ஏனெனில் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன் துறை ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மாநாடு என அனைத்தையும் முடித்து அரசுத் தரப்பில் முன்தயாரிப்பை செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!