வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (05/03/2018)

கடைசி தொடர்பு:16:17 (06/03/2018)

'எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்' - ரஜினிகாந்த் பேச்சு!

எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். 

ரஜினிகாந்த்

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, மக்கள் மன்றம் மூலம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார், நடிகர் ரஜினிகாந்த். முதல்கட்டமாக, நிர்வாகிகளை நியமித்துவரும் அவர், விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் சிலையை, இன்று ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அரசியல் அறிவிப்புக்குப் பின், ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். 

விழாவில் பங்கேற்பதற்காக அவர் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டையில் வந்தார். விழாவில் பேசிய அவர், "எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்ற சந்தேகம் எனக்கே உள்ளது. இங்கு கூடியிருக்கும் கூட்டம் அரசியல் மாநாடு போல் உள்ளது. இதில் அரசியல் பேச வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், அரசியல் பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியல் முட்கள், பாம்புகள் நிறைந்த பாதை என்பது எனக்கும் தெரியும். ஆனால் கருணாநிதி, மூப்பனார், சோ ஆகியோருடன் பழகியதால் நானும் அரசியல் கற்றுக்கொண்டேன். நான் என் வேலையைச் சரியாகச் செய்து வருகிறேன். 1996 முதல் அரசியல் தண்ணீர் என் மீது தெளிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை ஏன் கேலி செய்கிறீர்கள். திட்டுகின்ற அரசியலை இனி கைவிட்டுவிடுவோம். அரசியலுக்கு வருவதாக அறிவித்த மறுநாளே கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். 

கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது. இனிமேல்தான் நீங்கள் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள். தூய்மை என்பது தான் ஆன்மீக அரசியல் ஆகும். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது உண்மைதான். தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடத்தை நிரப்பவே நான் அரசியலுக்கு வருகிறேன். கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் அவர் கட்சியைக் கட்டிக்காத்தார். இதேபோல் இந்தியாவிலேயே கட்சியைக் கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா. 

அரசியலுக்கு யார் வந்தாலும், யாரும் எம்.ஜி.ஆராக முடியாது. அவர் ஒரு தெய்வ பிறவி. அவர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது. எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக மாற்றியவர் அவர். இன்று நான் வாழ்க்கையில் சந்தோசமாக இருப்பதும் முக்கிய காரணம் அவர்தான். அவரின் சிபாரிசில் தான் என் திருமணம் நடைபெற்றது. நான் இவ்வாறு பேசுவதால் எம்.ஜி.ஆர் விசுவாசிகளை இழுக்க பார்க்கிறார் என என்னை கூறுவார்கள். படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறக்கூடாது. வாழ்க்கையில் வசந்த காலம் என்பது மாணவர் பருவம்தான். அரசியலை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வராதீர்கள். தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால் தான் தமிழும் வளரும். அப்துல் கலாம், சுந்தர் பிச்சை போன்றோர்களால் தமிழின் பெருமை உயர்ந்துள்ளது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க