`இந்த இரண்டும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்'- தஞ்சை ரசிகர்களுக்கு ரஜினி அட்வைஸ்!

தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என தஞ்சை ரசிகர் மத்தியில் நடிகர் ரஜினி, வீடியோ கான்ஃபரன்ஸில் பேசினார். 

ரஜினிகாந்த்

தஞ்சை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் ரஜினி கணேஷன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி சுதாகர், மாநில பொதுச்செயலாளர் ராஜூமகாலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 பேர் வீதம் 14 ஒன்றியம், 22 பேரூராட்சி, ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகளிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அனுமதிக் கடிதத்துடன் வந்தனர். ஆலோசனைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொருவருக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. இதில், அவர்களது பெயர், சுயவிவரங்கள் மற்றும் எத்தனை ஆண்டுக்காலம் மன்றத்தில் உள்ளார்கள், என்ன பதவிக்கு போட்டியிட விரும்புகின்றனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருந்தது. உறுப்பினர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்திசெய்து கொடுத்து பதிவுசெய்துகொண்டனர். 

 மாநில நிர்வாகி சுதாகர் பேசியபோது, ''தஞ்சையில் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றியம், நகரம் வாரியாக நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டு, செயற்குழு அமைக்கப்படும். ரஜினிகாந்த் அரசியலுக்கு எங்கே வரபோகிறார், அவர் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார் என்று எல்லோரும் பேசினர். இவ்வாறு அவரைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள், எல்லோரும் வியக்கும்படி நேற்று எந்தவித குறிப்புகளும் இல்லாமல் தொடர்ச்சியாக 45 நிமிடங்களுக்கு மேல் பேசியுள்ளார். நீங்கள் எல்லோரும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று காத்திருந்தீர்கள். இப்போது வந்துவிட்டார். அவருக்கு நீங்கள் எல்லோரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அவரை முதல்வர் நாற்காலியில் உட்காரச் செய்ய வேண்டும். ரஜினிகாந்த் பேசியுள்ள வீடியோ பதிவு இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  அது, உங்கள் முன் போட்டுக் காண்பிக்கப்படும். அவர் என்ன அறிவுரை சொல்கிறார் என்று பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றார். 

இதையடுத்து, ரஜினிகாந்த் பேசிய உரையாடல் பதிவு திரையிடப்பட்டது. அதில், "தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். இது, கஷ்டமான வேலைதான். இதற்கு நாம் அனைவரும் ஒழுக்கம், கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும். இதை நான் பொதுநலனுக்காகக் கூறுகிறேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று உள்ளோம். இது, ஆண்டவன் கொடுத்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை விட்டுவிடக் கூடாது. அதே நேரத்தில், நமக்கு வீடு முக்கியம். வீட்டை சரியாக வைத்துக்கொண்டு, அதன்பின்னர் அரசியலுக்கு வரவேண்டும். நம்மிடம் போட்டி, பொறமை ஏற்பட்டுப் பிரிந்துவிடுவார்கள் என்று சிலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லோரும் 100 சதவிகிதம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்று யாரும் பொறாமைப்பட வேண்டாம். தலைமை சரியான முடிவுதான் எடுக்கும். ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றுடன் நாம் இருக்க வேண்டும். நம்மை ஆண்டவன் காப்பாற்றுவார். நான் இருக்கிறேன்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!