Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

இந்து மதத்தை மட்டும் எதிர்த்தாரா... தமிழர்களை காட்டுமிராண்டி என்றாரா..? - பெரியார் குறித்த வதந்திகளும் உண்மைகளும் #FAQ

பெரியார்

பொதுவாக ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பேசுபொருளாக இருந்த பெரியார் இன்று ஹெச்.ராஜாவின் விரல்வித்தையில் ட்ரெண்டாகி இருக்கிறார். பெரியார் என்றும் ராமசாமி நாயக்கன் என்றும் இரு தரப்புகள் கருத்துமோதல் நடத்துகின்றன. ஒருவகையில் இது ஆரோக்கியமான விஷயம்தான். விவாதங்களின் வழி வேறுபாட்டை ஒழிக்கவேண்டும் என்று பெரியாருமே ஆசைப்பட்டிருக்கிறார்தான். ஆனால் ராமசாமி என அடையாளப்படுத்தும் இளைஞர்கள் பலரும் வெறும் வாட்ஸ் அப்பில் வரும் அரைகுறை பார்வேர்டுகளை வைத்தே போர் தொடுக்கிறார்கள். 'அவர் நிஜமாகவே அப்படி சொன்னாரா? அப்படியென்றால் ஏன் சொன்னார்?' என திருப்பிக் கேட்டால் அவர்களிடத்தில் பதில் இல்லை. இப்படியான புரிதல் யாருக்கும் உதவப்போவதில்லை என்பதால் பெரியார் குறித்து சொல்லப்படும் சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள் இவை. இதில் எதுவுமே புதிது கிடையாது. பல ஆண்டுகளாக... பலராலும் சொல்லப்படும் பதில்களின் டைம்லி ரீமேக்தான். கவலைப்படாதீர்கள்! வாட்ஸ் அப் பார்வேர்டுகளை வைத்து உளறிக்கொட்ட ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் ஆகியோர் அடங்கிய ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் இருக்கிறது. தொடர்ந்து கன்டென்ட் தருவார்கள்.

இந்துமதத்தை மட்டும் எதிர்த்தாரா பெரியார்?

இந்துமதத்தை மட்டுமே பெரியார் குறிவைத்தார் என்பதில் உண்மையில்லை. 'ஒரு மதமும் வேண்டாம் என்பதுதான் சரியான பேச்சும் திட்டமும் ஆகும். மதம், மக்களுக்கு விஷம். மதம், மனிதன் ஒற்றுமைப்படுவதை தவிர்க்கிறது. ஆகையால் எல்லா மதங்களும் இந்நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும். நான் எந்த மதத்திற்கும் விரோதிதான்' என 1936-ல் கொச்சியில் நடந்த கூட்டத்தில் பேசினார் பெரியார். கடவுள், மத, சாஸ்திர, புராண இதிகாச ஒழிப்பிற்கு ஒத்துழைக்கும் என்பதால் புத்தர் சொன்னவற்றை மட்டும் ஆதரித்தார். அதுவும் அது கொள்கைதான், மதமல்ல என்ற விளக்கத்தோடு. அறிவுதான் குரு என புத்தர் சொன்னதை வழிமொழிந்தார். அதேசமயம் பவுத்தர்கள் பெயரளவில்தான் அவர் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்ற விமர்சனமும் அவருக்கு இருந்தது. அவரின் பெரும்பான்மையான கருத்துகள் ஏன் இந்து மதத்தை மட்டும் குறிவைத்து இருந்தன?

காரணம், இங்கே பெரும்பான்மையினரின் மதமாக அதுவே இருந்தது. அதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒருபெரும் கூட்டத்தையே பாதிக்கும் சங்கடங்களாக இருந்தன. அதனாலேயே அவர் தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராக கடுமையாக குரலெழுப்பி வந்தார். 'இந்துமதம் வேதமதம், வேதம், கடவுளால் சொல்லப்பட்டது என்கிறார்கள். ஆனால் அதை ஏன் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் படிக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டுமே வேதம் படைத்த கடவுள் எப்படி எல்லாருக்குமானவராக இருக்கமுடியும்? வேதங்களில் இருந்துதானே சாதிப்பிரிவுகள் வந்தது? அப்படி சாதியின் பெயரால் மக்களைப் பிரிக்கும் மதம் வேண்டாம்' என்பதுதான் பெரியாரின் அடிப்படையான வாதம். ஆனால் தான் வளர்த்த ஆதரித்த குழந்தைகள் என்ன மதம் பயிலவேண்டும் என்பதில் அவர் குறுக்கிடவே இல்லை. 'தங்களின் சிந்தனையால் அவர்கள் நாத்திகரானால் சரி' என கடவுள் வாழ்த்தைக்கூட அவர் மறுக்கவில்லை.    

 

கடவுள் சிலைகளை நொறுக்கினாரா பெரியார்?

எந்தக்கோவிலுக்குள்ளும் நுழைந்து சிலைகளை அடித்து நொறுக்கவில்லை பெரியார். 1953-ல் தன் காசில் பிள்ளையார் சிலையை வாங்கி அதை உடைத்தார். காரணம், அதே பார்ப்பன - சூத்திரக் கொள்கைதான். 'நீங்கள் கடலில் கரைக்கிறீர்கள். நான் அதையே உடைத்து மண்ணோடு மண்ணாக ஆக்குகிறேன்' என விளக்கமும் அளித்தார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. 'பிள்ளையார் உருவத்தை அவர்களே செய்து அவர்களே உடைக்கிறார்கள். இதில் தவறு ஒன்றுமில்லையே' என வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி ராமன் நாயர்.

பெரியார்

தமிழர்களை காட்டுமிராண்டிகள் என வர்ணித்தாரா பெரியார்?

இது பெரும்பான்மையானவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை? 'திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர்கள் தங்களின் கலாசார, பழக்க வழக்கங்களை அடியோடு மறந்துவிட்டார்கள். அவற்றை ஒருபிரிவினர் மறைத்துவிட்டார்கள். இப்போது தமிழன் கொண்டாடும் அனைத்துக் கலாச்சாரங்களும் அவனை அடிமை சமூகமாக நிறுவவே உதவி செய்கின்றன. அறுவடைத் திருநாள் தவிர்த்த பிற பண்டிகைகள் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கும் காட்டுமிராண்டித்தன்மைக்கே வழிவகுக்கின்றன. எனவே அடிமைதளையிலிருந்து வெளிவரவேண்டுமென்றால் சாதி இழிவை வளர்க்கும் கலாச்சாரங்களை பின்பற்றாதீர்கள்' - இதுதான் 1970-ல் அவர்விட்ட அறிக்கையின் சாராம்சம். 

'நம்மில் சிலர் பணம், பதவிக்கு ஆசைப்பட்டு சாதி இழிவிற்கு துணைபோகிறார்கள். இந்து சட்டம், நீதிமன்றம் என அனைத்திலும் பார்ப்பனருக்கு ஒரு நீதி, சூத்திரர்களுக்கு ஒரு நீதி என்று இருக்கிறது. இதை லட்சியம் செய்யாமல் காட்டுமிராண்டிகாலத்தவர்களாகவே இருக்கிறோம். இந்தப் புராண மாயையில் இருந்து வெளிவரவேண்டும்' என 1943-லேயே கட்டுரை எழுதியிருக்கிறார். அடிமைப்பட்டு கிடப்பது காட்டுமிராண்டித்தனம் என அவர் பல சமயங்களில் சொன்னதுதான் இப்போது வேறுவிதமாக திரிக்கப்பட்டுவிட்டது.

 

தமிழ்மொழி துவேஷியா பெரியார்?

தமிழ்மறை திருக்குறளையும் திருவள்ளுவரையும் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்கிறார் பெரியார். ஆரிய எதிர்ப்பு என்ற புள்ளியில் அவர் திருவள்ளுவரோடு இணைகிறார். மற்றபடி சிலப்பதிகாரம், பகவத் கீதை போன்ற இலக்கியங்களை அவர் பொருட்டாக கருதவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று அவர் கூறியதற்காக காரணம்? மொழி சீர்திருத்தம் மட்டுமே தமிழை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் என அவர் தீவிரமாக நம்பினார். ஆனால், அதற்கு யாரும் செவிசாய்க்காததால் இப்படி பழமையைக் கட்டி அழும் மொழி காட்டுமிராண்டி மொழி என்றார். மதப்பற்று, சாதிப்பற்று போல மொழிப்பற்றும் முரட்டுத்தனமாக இருக்கக்கூடாது. நெகிழ்வுத்தன்மை இருக்கவேண்டும் என அவர் விரும்பினார். அதேசமயம் இந்தித் திணிப்பையும், சமஸ்கிருத புனிதப்படுத்தலையும் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் ஆங்கிலத்தை மட்டும் கற்றுக்கொள்ள சொன்னது ஏன்? அவர் தமிழை விஞ்ஞானத் துறையில் புகுத்தி புதிய உலகை படைக்கவே விரும்பினார். ஆனால், நடைமுறை சிக்கல்களால் ஆங்கிலத்தை ஆதரித்தார். ஆங்கிலம் கற்றுக்கொள்வதன் மூலம் பொருளாதாரரீதியாக, அறிவுரீதியாக அடுத்தகட்டத்திற்கு செல்லமுடியும் என அவர் நம்பினார். அவர் அன்று சொன்னதுதான் இப்போது நடக்கிறது. ஆங்கிலம் வேலைவாய்ப்பில் முக்கிய இடம் வகிப்பதை மறுப்பதற்கில்லை. 

 

பார்ப்பனர்களுக்கு எதிராக விஷத்தை பரப்பினாரா பெரியார்?

பார்ப்பனீயத்தை மட்டுமே பெரியார் எதிர்த்தாரே தவிர பார்ப்பனர்களை அல்ல. 'பாம்பைக் கண்டால் விடு, பார்ப்பானைக் கண்டால் விடாதே' என பெரியார் சொல்லியதாக எங்குமே ஆதாரமில்லை. முறையான பதிவுகளுமில்லை. 'பிராமணர்களுக்கும் நமக்கும் பிரமாதமான பேதம் ஒன்றுமில்லை. அவர்களின் சில பழக்க வழக்கங்களைத்தான் எதிர்க்கிறோம். அவர்கள் மனதுவைத்தால் அதை எளிதில் மாற்றிக்கொள்ள முடியும். நாம் ஒருவருக்கொருவர் சமமாகவும் சகோதர உரிமையுடனும் இருக்கவேண்டும். அதில் பலாத்காரத்திற்கு இடமில்லை' என 1953-ல் ராயப்பேட்டை கூட்டத்தில் சொன்னார் பெரியார். 

'எனக்கு எந்த சமுதாயம் மீதும் குரோதம் இல்லை. சமுதாயத்தில் பார்ப்பனர்கள் அனுபவிக்கிற உயர்வு மீதுதான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இங்கே யாவரும் ஒருதாய்ப்பிள்ளைகள் என அவர்கள் கருதுவார்களேயானால் நான் போராட தேவையே இருக்காது' என 'பார்ப்பனத் தோழர்களுக்கு' அறிக்கையில்(1962) கூறுகிறார் பெரியார். 

'பார்ப்பான் மேல்சாதியாக இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணமே தவிர, அவன் பணக்காரனாக இருக்கக்கூடாது, நல்வாழ்வு வாழக்கூடாது என்பது என் எண்ணமில்லை' என இறப்பதற்கு ஓராண்டு முன்புகூட (1972) எழுதினார் பெரியார். ஆனாலும் அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கெதிராக நிலைநிறுத்துவதுதான் முரண்.

பெரியார்

முழு ஆல்பம் பார்க்க

வளர்ப்பு மகளையே திருமணம் செய்த காமவெறியரா பெரியார்?

அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபடப்போவதால் அவரை அடுத்த வாரிசாக அறிவிக்க முடியாத சூழ்நிலை பெரியாருக்கு. என்.அர்ஜுனன், ஈ.வெ.கி சம்பத் ஆகியோரை வாரிசுகளாக அறிவிக்கும் முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன. இயக்கத்தின் வாரிசாக அறிவிக்க சரியான ஆள் மணியம்மைதான் என முடிவு செய்கிறார் பெரியார். ஆனால் அன்று இருந்த இந்துச் சட்டத்தின்படி ஒரு பெண்ணைத் தத்தெடுக்க முடியாது. வாரிசாக அறிவிக்கவேண்டுமென்றால் திருமணம் மட்டுமே செய்யமுடியும். எனவே அவர் காலங்காலமாக எதிர்த்துவந்த அதே இந்து சட்டத்தின்படியே திருமணம் செய்யவேண்டிய நிர்பந்தம். திருமணம் நடந்தபோது பெரியாரின் வயது 69. பிரம்மதேவனின் மாண்புமிகு புதல்வனான மன்மதன் வந்து அம்புவிட்டாலும் 69 வயதுக் கிழவருக்கு உடலாசை தோன்ற வாய்ப்பு இல்லை என்பதை பகுத்தறியும் அனைவருமே அறிவார்கள். எனவே இந்தக் குற்றச்சாட்டில் கொஞ்சமும் உண்மையில்லை.

 

விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்?

நிச்சயமாக இல்லை. கருத்து சுதந்திரத்தை பெருமளவில் மதித்தவர் பெரியார். ம.பொ.சியின் நண்பரான மாலி பெரியாரை கடுமையாக விமர்சித்து நாடகம் இயற்றியபோது, 'உன் கருத்தை நீ சொல்ற, அதுல தப்பு ஒண்ணுமில்ல' என்றார் பெரியார். அவ்வளவு ஏன்? பெரியாரை நேருக்கு நேர் எதிர்த்த ம.பொ.சியே, 'பொதுவாழ்வில் அவர் கடைபிடித்துவரும் நேர்மை, கொள்கையில் இருக்கும் உறுதி ஆகியவற்றால் மாற்றுக்கட்சியினராலும் போற்றிப்புகழத்தக்கவர்' என 1962 பெரியார் பிறந்தநாள் மலரில் எழுதியுள்ளார். 'நான் சொல்லுவதில் பிசகிருந்தால் என் அறியாமையை மன்னியுங்கள்' எனச் சொல்லியிருக்கிறார் பெரியார். இங்கே விமர்சனங்கள் கூடாதென்பதில்லை. அவரை முழுமையாக படித்துவிட்டு, ஏன், எதற்கு, எந்த காலக்கட்டத்தில் அப்படி சொன்னார் என்பதை தெரிந்துகொண்டு விவாதிப்பது மட்டுமே சரியான விமர்சனமாக இருக்கமுடியும்.

 

பெரியார் மறைந்துவிட்டாரா?

பெரியார் என்பது அவரின் பெயரல்ல. அது ஒரு சித்தாந்தம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகச் சொல்லப்படும் மனுவின் நீதியே இன்னும் உயிர்ப்போடு இருக்கும்போது நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு சித்தாந்தம் அழிந்துவிடுமா என்ன அவரின் சிலையை அகற்றினால் சித்தாந்தம் அழிந்துவிடும் என்பதில்லை. பின் ஏன் இந்த எதிர்ப்பு? சிலையைக்கூட இங்கே தொடமுடியாது என்ற உணர்வின் குறீயீடுதான் அது. முன்பைவிட இப்போது அதிகமாக பெரியாரிசம் பற்றி பேசவேண்டிய கட்டாயம் எல்லாருக்கும் இருக்கிறது. பேசுவோம். கருப்புச் சட்டை அதிகார வர்க்கத்தின் கண்களில் மிரட்சியைக் கொண்டுவரும் வரையில்... பெரியாரை புறக்கணித்துவிட்டு இங்கு அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இருக்கும்வரையில்... பேரென்ன எனக் கேட்டால் பெருமைவிடுத்து பெயரை மட்டுமே சொல்லும் வரையில்... அடையாளங்களை அறிவிக்கக் கூச்சப்படும் நிலை இருக்கும்வரையில்... சாதி, மத ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரையில்... பெரியார் இருப்பார்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement