தனியாரிடம் மதுபானக்கடை... லாட்டரிக்கு ஜாக்பாட்- தமிழக பட்ஜெட் பரபரப்புகள்! #VikatanExclusive | tamilnadu budget and what could be on the store for the people?

வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (13/03/2018)

கடைசி தொடர்பு:13:06 (17/04/2018)

தனியாரிடம் மதுபானக்கடை... லாட்டரிக்கு ஜாக்பாட்- தமிழக பட்ஜெட் பரபரப்புகள்! #VikatanExclusive

பட்ஜெட் கூட்டத்தொடர்

நிதி நெருக்கடியில் தமிழகம் சிக்கித் தவித்துவரும் நிலையில் மார்ச் 15-ம் தேதி அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. 

தமிழகத்தின் நிதிநிலை கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதே கடும் பற்றாக்குறையைச் சந்தித்தது. குறிப்பாக தமிழகத்தின் கடன் சுமை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் செயல்படுத்தபடும் பல்வேறு இலவசத் திட்டங்களை நிறுத்தாவிட்டால், வரும் காலங்களில் தமிழகத்தின் நிதிநிலை என்பது அதலபாதாளத்துக்குச் சென்றுவிடும் என்று நிதித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், தொடர்ந்து தமிழகத்தின் நிதிநிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்த நிலையில்தான் வரும் 15-ம் தேதி தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் முன்வடிங்களை தயாரிக்கும் பணியில் நிதித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நிதி சுமையைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நிதித்துறையில் செயல்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிதித்துறைக்கு நெருக்கமான அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “தமிழகத்தின் நிதி நிலைதொடர்ந்து மோசமாகத்தான் இருந்து வருகிறது. மத்திய அரசு எதிர்பார்த்த அளவு நிதி ஒதுக்கவில்லை. அதைத் தாண்டி மானியம் மற்றும் இலவசங்களுக்கு ஏராளமாக நிதி செலவாகிவருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பேசிய அப்போதைய நிதி அமைச்சர் ஜெயக்குமார், ‘தமிழக அரசின் கடன் 1 லட்சம் கோடி அதிகரித்து 3,14,366 கோடியாக உள்ளது’ என்றார். 2017 - 18-ம் ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக உள்ளதாகக் குறிப்பிட்டார். அதேபோல், தமிழக அரசின் மொத்த கடன் சுமை, நான்கு லட்சம் கோடியை எட்டிவிடும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தார். அந்த நிலையை தமிழகம் எட்டிவிட்டது. 

உதய் திட்டம், ஜி.எஸ்.டி போன்றவற்றால் தமிழகத்தின் நிதி நிலையில் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அரசு தரப்பு வருவாய் ஈட்டும் விஷயங்களில் கவனம் செலுத்தாமல், செலவீனங்களிலே அதிக முதலீடுகளைச் செய்துவருவது நிதி நிலைக்கு ஆபத்தாக முடியும். மேலும், தமிழக அரசின் வருவாயில் பெரும் தொகை அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கும் ஓய்வு ஊதியத்துக்குமே செல்கிறது. அதைக் குறைக்கத்தான் அரசு ஊழியர்களின் தேவைகள் குறித்து குழு ஆய்வுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம்

அதேபோல், வருவாய் ஈட்டும்வகையில் சில விஷயங்களை இந்த அரசு கையில் எடுக்கும் திட்டத்தில் உள்ளது. குறிப்பாக மதுவினால் தமிழக அரசுக்குக் கணிசமாக வருமானம் வந்தாலும் மதுவுக்கு எதிரான போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக அரசு நடத்தும் மதுபானங்களை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டமும் உள்ளது. அதேபோல், பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக கஜானாவை நிரப்பியதில் முக்கிய பங்கு லாட்டரிக்கு இருந்தது. அதேபோல், லாட்டரியை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. லாட்டரிக்கு அனுமதி அளித்தால் அதை முறைப்படுத்தி முழுமையாக அரசு கட்டுபாட்டில் எவ்வாறு செயல்படுத்தலாம், தனி நபர்களின் ஏகபோகத்தை லாட்டரி தொழிலில் அனுமதிக்காமல் செய்யமுடியுமா என்றெல்லாம் ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு விஷயங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கும் எண்ணம் நிதி அமைச்சகத்திடம் உள்ளது. 
மேலும் கனிவளங்கள் தமிழகத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அதை இதுவரை தனியார் நபர்கள்தான் காசாக்கி வந்தார்கள். இனி கனிம மணல் முதல், கிரானைட் குவாரி வரை அரசே ஏற்று நடத்தி, வருவாய் ஈட்டும் திட்டம் உள்ளது. ஆனால், இதற்கு முன்பு மணலை இதே போல் தமிழக அரசு ஏற்றுநடத்துவதாக அறிவித்து அதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. அதே நிலை கனிமவளங்கள் விஷயத்தில் வந்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது” என்று சொல்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள்.

இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஏதும் இருக்கப்போவதில்லை... அதே நேரம் வருவாயைப் பெருக்கும் சில கிடுக்குப்பிடி அறிவிப்புகள் கண்டிப்பாக இருக்கப்போகின்றன. சில இலவசங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யாமல் சத்தமில்லாமல் அதற்கு மூடுவிழா நடத்தும் அறிவிப்பும் வரலாம் என்கிறார்கள். 

‘‘நிதி அமைச்சர் பெயரில் செல்வம் இருந்தாலும் தமிழகத்தின் நிதிநிலையில் செல்வ செழிப்பு இல்லை’’ என்று நக்கலாகச் சொல்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள். 

    
 


டிரெண்டிங் @ விகடன்