Published:Updated:

அம்மாவிடம் சொல்லி விடுங்கள்!

கருப்பசாமியின் கடைசி வார்த்தைகள்

அம்மாவிடம் சொல்லி விடுங்கள்!

கருப்பசாமியின் கடைசி வார்த்தைகள்

Published:Updated:

''நாடு இது நாடாவா கெடக்குது
நாட்டாமை ஆட்சிதான் நடக்குது 
திரும்புற பக்கமெல்லாம் திருடுறான்
தினந்தினம் கொள்ளைகளை நடத்துறான்
அரிசிக்கு ஒரு ரூபா
ஆயி போக அஞ்சு ரூபா
கரண்டுபோன திசைய கண்டுபிடிக்க முடியலை
அரண்டுபோன மக்களுக்கு
அம்மாவைத் தவிர வேற வழியில்ல...'' 
 

அம்மாவிடம் சொல்லி விடுங்கள்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அமைச்சர் கருப்பசாமியின் பிரசித்திபெற்ற ரீமிக்ஸ் பாடல் இது. பாட்டுப் பாடியும் கிராமிய வார்த்தை​களை உச்சரித்தும், தான் இருக்கும் இடத்தை எப்போதுமே கலகலப்பாக வைத்திருந்தவர் கருப்பசாமி. அ.தி.மு.க. வெற்றி பெற்று அமைச்சரவை பொறுப்பேற்ற நாளில், முதல்வர் ஜெயலலிதாவை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தார் கருப்பசாமி. அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டதும் குடுகுடு என ஓடி வந்து பரபர வேகத்தில் 'கருப்பசாமி ஆகிய நான்’ என அவர் ஒரு கிராமத்துக்காரராக உறுதிமொழி எடுக்க... விழா அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது. விழா முடிந்து வெளியே வந்த அவரிடம், ''கொஞ்சம் நிறுத்தி நிதானமா வாசிச்சு இருக்கலாமே சார்...'' என சில பத்திரிகை நண்பர்கள் கேட்க, ''ஆடு, மாடு மேய்ச்சு திரிஞ்ச பயலை இன்னிக்கு கால்நடைத் துறைக்கு அமைச்சராவே ஆக்கிட்டாங்க அம்மா. அவங்களோட நேரம் நம்மால் வீணாகக் கூடாது தம்பி... ஒண்ணுக்கு ரெண்டு தடவைப் படிச்சிருந்தா இன்னும் வேகமா வாசிச்சு இருக்கலாமேனு நான் நெனச்சுட்டு இருக்கேன்... நீங்க என்னடான்னா இப்புடிக் கேட்குறீங்களே...'' என்றார். அதுதான் அவரது வெள்ளந்தி விசுவாசம்!

56 வயதான கருப்பசாமிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு ஏற்பட்டிருப்பது புற்றுநோய் என்பது சமீபத்தில்தான் தெரிய வந்தது. ஒன்றரை மாதத்துக்கு முன்னர் திடீரென சென்னை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். விஷயம் ஜெயலலிதாவுக்குத் தெரியவர, உடனடியாக கருப்பசாமியை தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி சொன்னார். அதையடுத்து, அப்போலோவில் சேர்க்கப்பட்டார். 'தேறுவது கடினம்’ என்கிற தகவல் அவரிடம் சொல்லப்பட, இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்​பட்டார்.

கடந்த 20-ம் தேதிவாக்கில் கருப்பசாமியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இந்தத் தகவல் கார்டனுக்குச் சொல்லப்பட, 'பெங்களூரு போய்வந்த பிறகு நேரில் பார்க்கிறேன். அவரிடம் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்’ எனச் சொன்னாராம் ஜெ. 22-ம் தேதி கருப்பசாமியின் மரணத் தகவல் முதல்வருக்குப் போக, அவசரகதியில் மருத்துவமனைக்கு வந்தார். ஜெயலலிதா அஞ்சலி செலுத்திய பிறகு, கருப்பசாமியின் உடல் அவருடைய சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருடைய வீடு மிகச் சிறியது என்பதால், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உடல் வைக்கப்பட்டது.

அம்மாவிடம் சொல்லி விடுங்கள்!

1996-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவே தோற்றுப்போன நிலையிலும், சங்கரன்கோவில் தொகு​தியில் கருப்பசாமி வாகை சூடினார். தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றவர். .

அம்மாவிடம் சொல்லி விடுங்கள்!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க. ராஜ்யசபா எம்.பி-யான தங்கவேலு உள்ளிட்ட பலரும் கட்சிப் பாகுபாடு பார்க்காமல் கருப்பசாமி உடலுக்கு அஞ்​சலி செலுத்த வந்தனர். ''ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் என் வீட்டுக்கு வந்து என் தாயிடம் ஆசி வாங்கிவிட்டுத்தான் செல்வார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதும் வந்தார். ஆனால், என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லாததால் சந்திக்க முடியவில்லை'' எனச் சொன்ன​போது வைகோவுக்கு கண் கலங்கிவிட்டது. 'கார்டனில் இருந்து வர்றேன். அம்மா அனுப்பி வெச்சாங்க...’ என்றபடி ஒரு பையுடன் கருப்பசாமியின் மனைவியை சந்தித்து ஆறுதல் சொன்னார் ஒருவர்.

பேசக்கூட முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமான போதுதான் இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை குடும்பத்தினரிடம் கண்ணீரோடு சொல்லி இருக்கிறார் கருப்பசாமி. மரணத்தின் மடியில் விழுவதற்கு முதல் நாள் 'அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். அதுவே அவருடைய கடைசி வார்த்தைகள் ஆகிவிட்டன! 

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism