மணல் டெண்டரில் மல்லுக்கட்டப்போகும் கொங்கு நிறுவனம்! - முடிச்சை அவிழ்ப்பாரா முதல்வர்? | Will edappadi palanisamy have control over sand tender notifications?

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (22/03/2018)

கடைசி தொடர்பு:15:09 (22/03/2018)

மணல் டெண்டரில் மல்லுக்கட்டப்போகும் கொங்கு நிறுவனம்! - முடிச்சை அவிழ்ப்பாரா முதல்வர்?

"தமிழகத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய மணல் குவாரிகளைத் திறப்பதற்கான டெண்டர் இன்று விடப்படுகிறது" என்று சட்டசபையில் தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாசி

'மண்ணும் பொன்னாகும் என்ற வித்தைதான்' மணல் தொழில். குறிப்பாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மணல் தொழில் மூலம் கோடிகளை அள்ளியது சில தனியார் நிறுவனங்கள். அரசுக்குச் செல்ல வேண்டிய வருவாய் சில தனிநபர்கள் வசம் இருந்தது. சேகர் ரெட்டி, ஆறுமுகசாமி, ராமச்சந்திரன் என்று கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, மணல் தொழிலில் கோலோச்சியவர்கள் ஏராளம். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மணல் தொழில் செய்துவந்தவர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் மத்திய அரசின் வருவான வரித்துறை ரெய்டு நடத்தியது. அதேநேரம் எடப்பாடி தலைமையிலான புதிய அரசு, மணல் தொழிலை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவிப்பு செய்தது.

தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகளில் மணல் இல்லாத நிலையில், மாநிலம் முழுவதும் எட்டு இடங்களில் மட்டுமே மணல் அள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய மணல் குவாரிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது. ஆனால், அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால், அந்த வழக்கில் புதிய மணல் குவாரிகள் திறக்க நீதிமன்றம் தடைவித்தது. இதனால், மணல் தட்டுப்பாடு கடுமையாக நிலவத் தொடங்கியது. இந்த நிலையில் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்துள்ளது. இந்த நிலையில்தான் புதிதாக 13 மணல் குவாரிகள் திறப்பதற்கான டெண்டர் அண்மையில் விடப்பட்டன. அவற்றில் குறிப்பிட்ட சில குவாரிகளை எடுப்பதற்கு ஆறு நிறுவனங்கள்  விண்ணப்பம் செய்திருந்தன. இந்த ஆறு நிறுவனங்களுமே கட்டுமானத் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களே. மேலும், இந்த நிறுவனங்களுக்குப் பின்னால் இருப்பது அ.தி.மு.க புள்ளிகள்தான். இந்த டெண்டரில் சில குவாரிகளை மட்டும் சில நிறுவனங்கள் எடுத்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டிருப்பதுடன், டெண்டர் எடுக்கப்படாத குவாரிகளுக்கு இன்று டெண்டர் விடப்படும் என்று சட்டசபையில் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே மணல் குவாரிகளை யாருக்குக் கொடுப்பது என்ற பேச்சு கோட்டையில் நடந்துள்ளது. 

புதிதாகத் தொழிலுக்கு வருபவர்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பார்களா? என்ற ரீதியில் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. முதல்வரின் எண்ணமோ தனக்கு நெருக்கமான ஒருவர், இந்த தொழிலில் ஈடுபட்டால்தான் சரியாக கணக்குப் பார்க்க முடியும் என்ற மனநிலையில் இருக்கின்றார். ஏற்கெனவே இந்தத் தொழிலில் ஈடுபட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பிரமுகரிடம் முதல்வர் ஆலோசனை கேட்டபோது, "நான் இந்த தொழிலில் இப்போது ஈடுபட விரும்பவில்லை” என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம். அதன் பிறகே கொங்குமண்டலத்தின் பக்கம் முதல்வர் தன் பார்வையைத் திருப்பினாராம்.

தமிழகத்தில் சமூக நலத்துறையில் கோலோச்சும் நாமக்கல் நிறுவனம் ஒன்றிடம் மணல் பிசினஸ் குறித்து முதல்வர் தரப்பில் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களும் ஒகே சொல்லியுள்ளனராம். அதன் பின்னரே டெண்டர் தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுள்ளன. "புதிதாக மணல் தொழிலுக்கு வரும் அந்த நிறுவனத்திற்கு ஏற்றாற்போல், டெண்டர் விதிமுறைகளில் சில மாற்றங்களைச் சத்தமில்லாமல் செய்துள்ளார்கள். இந்த நிறுவனத்திற்குத் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான குவாரிகளை ஒப்பந்தத்திற்கு விட முடிவாகியுள்ளது. இன்று நடைபெறும் டெண்டரில் பதினாறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்பட்டாலும், முதல்வரின் ஆசி பெற்ற அந்த நாமக்கல் நிறுவனத்திற்கே மணல் அள்ளும் உரிமை செல்லப்போகிறது" என்கிறார்கள் இந்தத் தொழிலில் ஏற்கெனவே கோலோச்சியவர்கள். 

முதல்வருக்கு வேண்டப்பட்ட நிறுவனத்திற்கு மணல் டெண்டர் விடப்பட்டாலும், அவர்கள் ஆற்றில் மணல் அள்ளி, அதை யார்டுக்குக் கொண்டுவரும் பணிகள் மட்டுமே அவர்கள் வசம் இருக்கும் என்றும், யார்டில் சேகரிக்கப்படும் மணலை ஆன்லைன் முறையில் அரசே நேரடியாக விற்பனை செய்யும் என்றும் முதல்வர் சட்டசபையில் விளக்கம் தந்துள்ளார். அரசே இந்தத் தொழிலைச் செய்ய முடியாமல் திணறியதைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல்வரிடம் எடுத்துச் சொல்லியுள்ளார்கள். ஆனால், எடுத்தவுடன் நேரடியாக தனியாருக்குக் கொடுத்தால் சிக்கலாகிவிடும் என்பதால், முதலில் மணல் அள்ளும் உரிமையை மட்டும் தனியார் வசம் ஒப்படைத்துவிட்டு, காலப்போக்கில் மணல் விற்பனை முழுவதையுமே அவர்களிடம் ஒப்படைக்கும் திட்டம் தமிழக அரசிடம் இருக்கிறதாம். முதல்வரின் இந்த ரகசியத் திட்டம் இப்போது சில நிறுவனங்களின் காதுகளுக்கு எட்டியுள்ளதால், அந்த நிறுவனங்கள், தங்களுக்கும் மணல் அள்ளும் உரிமை வேண்டும் என்று முதல்வரிடம் மன்றாடி வருகிறார்கள். ஆனால், இந்தத் தொழிலில் கோலோச்சியவர்கள் எல்லாம் தற்போது அமைதியாக இருப்பது ஏன் என்பது, புதிதாக மணல் அள்ளும் தொழிலில் களம் இறங்குபவர்களுக்குப் புரியவில்லை. 

முதல்வரின் ஆசியுடன் மணல் தொழில் சுவர்ணத்தை அள்ளத் தயாராகி விட்டது கொங்குமண்டலத்தைச் சேர்ந்த அந்த நிறுவனம்.