Published:Updated:

மகாராஷ்டிரா: சபாநாயகர் அறையில் அமளி..! - பாஜக எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் ஓராண்டு சஸ்பெண்ட்

சட்டமன்றத்துக்கு வெளியில் போராட்டம்
சட்டமன்றத்துக்கு வெளியில் போராட்டம்

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்றதின் இரண்டு நாள் மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதில் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் விவரங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதை உணவு மற்றும் சிவில் சப்ளை துறை அமைச்சர் சகன் புஜ்பால் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் கோரினர். ஆனால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், அவையை நடத்திய பாஸ்கர் ஜாதவ் 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார். இதனால் சபாநாயகரின் அறைக்குச் சென்ற பாஜக உறுப்பினர்கள் சபாநாயகர் அறையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி பாஜக உறுப்பினர்கள் 12 பேரை ஓராண்டுக்கு அவை நடவடிக்கைகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் அனில் பரப் சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றதுக்கு வெளியில் போராட்டம்
சட்டமன்றதுக்கு வெளியில் போராட்டம்

சஞ்சய் குதே, ஆசிஷ் ஷெலார், அபிமன்யு பவார், கிரிஷ் மகாஜன், அதுல், பராக் அலாவ்னி, ஹரிஷ் பம்பாலே, யோகேஷ் சாகர் உட்பட 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள். சஸ்பெண்ட் காலத்தில் 12 எம்.எல்.ஏ-க்களும் மும்பை மற்றும் நாக்பூர் சட்டமன்ற வளாகத்துக்கு வரக் கூடாது என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், `எஞ்சிய கூட்டத்தை பாஜக ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சி இது என்று குற்றம்சாட்டினார். பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவங்களால் அவையில் ஒரே அமளியாக இருந்தது. சட்டமன்றக் கூட்டம் மேலும் ஒரு நாள் மட்டுமே நடக்கவிருக்கிறது. இதில் சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப் பெறும்படி கேட்க பாஜக முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே பாஜக., சிவசேனாவை தங்களின் எதிரி இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது `பாஜக, சிவசேனா இடையிலான உறவு நடிகர் அமீர் கான் மற்றும் கிரண் ராவ் இடையிலான உறவைப் போன்றது’ என்று சிவசேனாவின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சஞ்சய் ராவத்திடம் மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், `சிவசேனா எங்களது எதிரி கிடையாது’ என்று தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டதற்கு, ``நாங்கள் இந்தியா-பாகிஸ்தான் அல்ல. எங்களது உறவு அமீர் கான் மற்றும் கிரண் ராவ் இடையிலான உறவைப் போன்றது. எங்கள் (சிவசேனா, பாஜக) வழிகள் வேறு வேறு. ஆனால் நட்பு தொடர்கிறது” என்று தெரிவித்தார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

பாஜக பக்கம் சென்றுவிடுவது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தி, அதன் மூலம் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சிவசேனா நெருக்கடியில் வைத்திருக்க நினைக்கிறது. அதனால்தான் பாஜக-வுடனான நட்பு இன்னும் தொடர்வதாகக் கூறிக்கொண்டிருக்கிறது. அமீர் கானும் அவருடைய மனைவி கிரண் ராவும் சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தனர். ஆனால் விவாகரத்து செய்துகொண்டாலும் தொடர்ந்து நட்புடன் இருப்போம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு