Published:Updated:

சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?

சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?

முதல்வர் அம்மாவுக்கு அறிவு அம்மாஅற்புதம் அம்மாள்கடிதம்

சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?

முதல்வர் அம்மாவுக்கு அறிவு அம்மாஅற்புதம் அம்மாள்கடிதம்

Published:Updated:
சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?
பிரீமியம் ஸ்டோரி
சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?
சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?

‘‘மனிதநேயமுள்ள மக்களுக்கு,

வணக்கம். என்னுடைய பெயர் அற்புதம். யார் இந்த அற்புதம்? ஏன் நமக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று யோசிக்கிறீர்களா?

உங்களுக்கு என்னை யார் என்று தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆம், நான்தான் அற்புதம் அம்மாள். பேரறிவாளனின் தாய். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறே செய்யாமல் கைது செய்யப்பட்ட அப்பாவிக் குழந்தையின் தாய்தான் நான்.

என் கணவர் ஒரு பள்ளி ஆசிரியர். என் குடும்பம் ஒரு பறவையின் கூடுபோல அழகான குடும்பம். எல்லோர் வாழ்க்கையிலும் இன்பமும் துன்பமும் வந்து வந்து போகும். எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவர். ஆனால், 25 ஆண்டுகளாக என் வாழ்க்கையில் ‘இயல்பு வாழ்க்கை’ என்பது திரும்பவே இல்லை. துன்பம் வரும்போது தூக்கம் தொலைந்துபோகும் என்பார்கள். 1991-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி இரவு 12 மணிக்கு நான் தொலைத்த தூக்கம் எனக்கு இன்றுவரை மீண்டும் வரவில்லை. என் மகன் சிறைக்கொட்டடிக்குப் போய் இன்றுடன் 25 ஆண்டுகள் முடிந்துவிட்டது.

சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?

1991 ஜூன் 10 அன்று எங்கள் வீட்டில் சி.பி.ஐ. போலீஸார் என் அப்பாவி மகனை விசாரிக்க வந்தனர். ஆனால், அவன் அன்று பெரியார் திடலில் தங்கி இருந்தான். ‘இரண்டு நாட்களில் என் மகனை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறிவிட்டுச் சென்றார்கள். என் கணவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. ‘நாளைக்கே அவனை திடலில் சென்று சந்தித்து சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறினார். எங்களது மகனைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா? அவன் சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காதவன் ஆயிற்றே? மறுநாளே திடலுக்குச் சென்றேன். என் மகனிடம் செய்தியைக் கூறினேன். அவன் குழந்தை முகம் மாறாதவனாக, புன்னகையுடன் ‘இப்போதே போகலாம் அம்மா’ என்றான். தவறு செய்தவன்தானே பயப்படுவான்? நானும் என் மகனும் பொருட்கள் வாங்கச் சென்றோம். மீண்டும் திடலுக்கு வந்து பார்த்தபோது எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. என் கணவரும், சி.பி.ஐ போலீஸாரும் இருந்தனர். என் கணவர் சி.பி.ஐ போலீஸாரிடம் என் மகனை அறிமுகம் செய்துவைத்தார். அந்த இருட்டிய நேரத்தில் என் 19 வயது மகனை அவர்களுடன் அனுப்பிவைத்தேன்; ‘மறுநாள் அனுப்பிவிடுவேன்’ என்று சி.பி.ஐ போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன், இன்றுவரை எனக்குக் கிடைக்கவில்லை.

ராஜீவ் காந்தி கொலை பல மர்மங்களைக் கொண்டது. எனது மகன் மீதான பிரதான குற்றச்சாட்டு, ‘அவன்தான் வெடிகுண்டை வடிவமைத்தான்’ என்பதுதான். ஆனால், ‘வெடிகுண்டை வடிவமைத்தது யார் என்றே தெரியவில்லை’ என்று இதை விசாரித்த ஓய்வுபெற்ற அதிகாரி தெரிவிக்கிறார். என் மகன் மீது வைக்கப்பட்ட எல்லாக் குற்றச்சாட்டுகளிலும் இருக்கும் பொய்களையும், குளறுபடிகளையும் அவனது ‘தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடலில்’ தெளிவாக எழுதி இருக்கிறான். ஆனால், நிரபராதியான ஒருவருக்கு ஏன் தண்டனை வழங்க வேண்டும்? அவனுக்கு உடனடியாகத் தூக்கு என்று அறிவித்தபோது ஐயோ... அது ஓர் உயிர்வலி. இந்த உலகில் இன்னும் எத்தனை பேர் தவறே செய்யாமல் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகிறார்களோ? நீதி மறுக்கப்படும் ஒவ்வொருவரின் முகத்திலும் நான் என் தங்கமான மகனின் முகத்தைப் பார்க்கிறேன்.

தூக்குத் தண்டனை நிறைவெற்ற போவதாக அறிவித்த உடனே தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. செங்கொடி என்ற பெண் தனது உயிரைக் கொடுத்து மூவரின் உயிரைக் காக்க தீபச் சுடர் ஏற்றினாள். அந்தப் பெண் இறந்து இருக்க வேண்டாம் என்ற குற்ற உணர்வு என்றுமே என்னையும் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் வாட்டி வருகிறது. அந்தப் பெண்ணின் மரணம் மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. என் மகன் உட்பட மூவர் தூக்குக் கயிற்றில் இருந்து விடுபட்டார்கள். ஆனால், ஒருவன் தவறே செய்யாமல் எத்தனை வருடங்கள்தான் சிறையில் வாடுவான்? யோசித்துப் பாருங்கள். 25 வருடங்களில் நானும், என் மகனும், என் குடும்பமும் இழந்தது எவ்வளவு? நீங்கள் உங்களது பிள்ளைகளுக்கு ஆசையாக புதுப்புது உணவுகளைச் சமைத்துத் தருவீர்கள். ஆனால்,  நான் என் ஆசை மகனுக்கு இத்தனை வருடங்களாக ஒன்றையும் சமைத்துத் தந்தது கிடையாது. குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால், ஒரு தாய் எப்படி பதறுவாள்? அவனுக்கு உடல்நிலை சரி ஆகும் வரை எவ்வளவு அக்கறையாகக் கவனித்துக்கொள்வாள்? என் மகனின் சிறுநீரகமே செயலிழக்கும் தருவாயில்கூட நான் அவன் அருகில் இல்லையே; அவனது தலையை என் விரல்களால் கோத முடியவில்லையே; அவனை என் மடியில் படுக்கவைக்க முடியவில்லையே.

என் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். அவரைக்கூட கவனிக்க முடியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறேன். இதை எல்லாம்விட மிகக் கொடுமையாக எனக்கு இருந்தது என் மகனை விடுதலை செய்ய தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா முடிவு செய்ததன் பின், அதனை மத்திய அரசு தலையிட்டு முட்டுக்கட்டை போட்டது.

சிறையில் 25 ஆண்டுகள் - வெள்ளி முளைக்குமா?

எட்டுக் கோடி மக்களின் அரசு, ஒருவரைத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப் போவதாக அறிவித்தபின்னும் அதனை மத்திய அரசு தலையிட்டு நிறுத்திவைப்பது எப்படி? சிறையில் இருப்பவர்கள் அப்பாவிகள் என்பது பல்வேறு விஷயங்களில் உறுதி ஆகியுள்ளது எனும்போது அவர்கள் ஏன் தடுக்க வேண்டும்? அப்படியென்றால், அவர்களுக்குத் தேவையானது உண்மையான குற்றவாளிகள் அல்லர்... குற்றம் சுமத்த சில அப்பாவிகள்.

நான் ஆரம்பத்தில் மனிதநேயமுள்ள மக்களுக்கு என்று குறிப்பிட்டதன் காரணம், தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் ஏழு தமிழர் விடுதலைக்கு ஆதரவு பெருகி வருகிறது. அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன்.
ஏழு தமிழர்களும் விடுதலை ஆக வேண்டும். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். இதற்கு தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா ஆவன செய்வார் என்பதை நான் நம்புகிறேன். ஒரு தாய்க்குத்தான் பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். அவரைச் சந்தித்தது நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வு. ஆனால், எனக்கு அன்றில் இருந்து ஒரு நம்பிக்கை இருக்கிறது. என் மகன் வீட்டுக்கு வருவான். அவன் என் மடியில் படுத்துத் தூங்கும் நாள் வெகு தூரம் இல்லை. ஏழு குடும்பங்களின் வாழ்க்கையும் மாறும். மனிதநேயமிக்க மக்களே, நீதிக்காகக் குரல் கொடுக்க, ஜூன் 11-ம் தேதி வேலூர் முதல் சென்னை வரை நடக்க இருக்கும் வாகனப் பேரணியில் இணைந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையுடன் இந்தக் கடிதத்தை முடிக்கிறேன். நன்றி.’’

இப்படிக்கு,
அற்புதம் அம்மாள்

 
சந்திப்பு: வெ.மோ.ரமணி